மேலும்

அமெரிக்க தீர்மான வரைவில் 14 பந்திகளை நீக்குமாறு கோருகிறது சிறிலங்கா

ravinatha aryasinhaஅனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் பரிந்துரை உள்ளிட்ட, 14 பந்திகளை, அமெரிக்கத் தீர்மான வரைவில் இருந்து நீக்க வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவிக்கும், 26 பந்திகளைக் கொண்ட தீர்மான வரைவை அமெரிக்கா முன்வைத்திருந்தது.

இந்த தீர்மான வரைவு குறித்து, ஜெனிவாவில் நேற்று முன்தினம் அமெரிக்கா முதலாவது முறைசாரா கலந்துரையாடலை நடத்திய போது, தீர்மான வரைவை நிராகரிப்பதாக சிறிலங்கா அறிவித்தது.

இந்த நிலையில், நேற்று மதியம், இரண்டாவது முறைசாரா கலந்துரையாடலை அமெரிக்கா நடத்தியது. இதற்கு ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெயத் ஹாப்பர் தலைமை தாங்கினார்.

இதன் போது, தீர்மான வரைவில் உள்ள 26 பந்திகளில், 14 பந்திகளை முற்றாகவே நீக்கி, தீர்மான வரைவை மென்மைப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க வலியுறுத்தினார்.

குறிப்பாக, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை் அமைக்கப் பரிந்துரைக்கும் பந்தி முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு பொறிமுறைக்கு ஆதரவான பந்தி சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சாட்சிகளைப் பாதுகாத்தலை வலுப்படுத்தல், காணிகளை மீள ஒப்படைத்தல், இராணுவமய நீக்கம், ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், வழிபாட்டுத்தலங்கள்  மீதான தாக்குதல்கள் குறித்த விசாரணை, நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த நம்பகமான விசாரணை, வெலிவேரிய துப்பாக்கிச் சூடு பற்றிய ஒரு அறிக்கை, மனித உரிமைகள் குறித்து ஆவணப்படுத்தும் ஒரு பொறிமுறை, அதிகாரப்பகிர்வு, பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களின் அறிககைகளுக்குப் பதிலளித்தல் போன்றவற்றுக்கு அழைப்பு விடும் பந்திகளையும் சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

நேற்றைய கூட்டத்தில், ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவுடன் இணைந்து பங்கேற்ற, ஜெனிவாவுக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி சமந்த ஜெயசூரிய, வியன்னாவுக்கான சிறிலங்கா தூதுவர் அசீஸ் ஆகியோர், தீர்மான வரைவில் இருந்து நீக்க வேண்டிய, திருத்த வேண்டிய டசின் கணக்கான விடயங்களைச் சுட்டிக்காட்டினர்.

அமெரிக்கத் தீர்மான வரைவில் உள்ள 26 செயற்பாட்டுப் பத்திகளில், 14 பத்திகளை மற்றாகவே நீக்க வேண்டும் என்றும், மேலும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கும்,குறைந்தது ஐந்து விடயங்களில் மொழிநடையை நீர்த்துப் போகச் செய்யும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

நான்காவது செயற்பாட்டுப் பத்தியில் உள்ள, அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறை ஒன்றை அமைக்க வலியுறுத்தும் பந்திக்குப் பதிலாக, அனைத்துலக தரம்வாய்ந்த பொறிமுறையை அமைக்க வேண்டும் என்று மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதிநிதிகளில் ஒருவரான அசீஸ் குறிப்பிட்டார்.

நிறுவனங்களின் தன்னாட்சியைக் கருத்தில் கொண்டு, மொழிநடையில் தெளிவு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

நான்காவது பந்தியை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும், அதிலிருந்து அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள் என்ற பகுதியை நீக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *