மேலும்

ஜெனிவாவில் ஆதரவு திரட்டும் அமெரிக்கா – அதுல் கெசாப்பும் ஜெனிவா விரைவு

US State Departmentசிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு, உறுப்பு நாடுகள் மத்தியில் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெனிவாவில்  வலியுறுத்தி வந்த அமெரிக்கா, இம்முறை, அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய- உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை (கலப்பு நீதிமன்றம்)  உருவாக்கும் தீர்மான வரைவு ஒன்றைத் தயாரித்துள்ளது.

ஐந்து பக்கங்களைக் கொண்ட இந்த ஆரம்ப தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜதந்திரிகள் உறுப்பு நாடுகளுடன் நடத்தவுள்ள கலந்துரையாடல்களின் பின்னர், இந்த தீர்மான வரைவில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, வரும் புதன்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பக்க நிகழ்வாக நடத்தப்படவுள்ள கலந்துரையாடலில் இந்த தீர்மான வரைவு குறித்து பகிரங்கமாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த தீர்மான வரைவுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் மத்தியில் ஆதரவு திரட்டும் பணிகளில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள், ஜெனிவாவில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜெனிவாவில் உள்ள அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கெய்த் ஹாப்பர் தலைமையில் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும், இதுதொடர்பான பணிகளைக் கவனிக்க ஜெனிவா வந்துள்ளார்.

இந்த தீர்மானத்துக்கு அதிகளவு நாடுகளின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதில் வொசிங்டன் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *