மேலும்

போர்க்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம்- ஐ.நா பரிந்துரை

Zeid-Raad-al-Husseinசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம்  நடத்திய விசாரணை அறிக்கையின் கண்டறிவுகள், பரிந்துரைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாட்டில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இதனைத் தெரிவித்தார்.

ஐ.நா அறிக்கை இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. முதல் பகுதி அறிக்கை 19 பக்கங்களைக் கொண்டது. இரண்டாவது  பகுதி 261 பக்கங்களைக் கொண்டது.

சிறிலங்காவில் 2001ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடையில் மோசமான  போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்துள்ளமை ஐ.நா விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா படைகள்,அவர்களுடன் சேர்ந்தியங்கிய துணை ஆயுதக் குழுக்கள் மற்றும் விடுதலைப் புலிகளால் இந்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மீீதான ஷெல் தாக்குதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், சிறார் ஆட்சேர்ப்பு, சித்திரவதைகள், பாலியல் ரீதியான குற்றங்கள், பலவந்தமாக காணாமற்போகச் செய்தல், மனிதாபிமான உதவிகளை மறுத்தல் உள்ளிட்ட குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நீதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் (hybrid special court) அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அறிககையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாக  உள்ள அதேவேளை, ஆண்டுக்கணக்கில் இதற்கான நீதி மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இந்த வன்முறைகளுக்கு காரணமான பல கட்டமைப்புக்கள் இன்னமும் தொடருகின்ற நிலையில் அங்கு இவற்றை விசாரிப்பதற்கான உள்நாட்டு பொறிமுறைகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், சந்தேகமும், கோபமும், நம்பிக்கையீனமும் அதிகரித்திருக்கிறது.

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் இவற்றை விசாரிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் கரிசனை குறிப்பிடத்தக்கதாக இருந்த போதிலும், சிறிலங்காவின் நீதித்துறை இன்னமும் இதற்கு தயாரானதாக இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பின்மை, இந்த அளவு பாரிய அனைத்துலக குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு உள்நாட்டு நீதிக்கட்டமைப்பு போதாமை, பத்தாண்டுகால அவசர நிலை, மோதல் மற்றும் குற்றத்துக்கு தண்டிக்கப்படாத நிலை, வாக்குறுதி மீறல்கள் ஆகியவற்றால் சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் நீதித்துறை சீர்கெட்டு, ஊழல் மயப்பட்டு இருப்பதும் இவற்றை உள்நாட்டில் உரிய வகையில் விசாரிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களாகும்.

அடக்குமுறை சார்ந்த கட்டமைப்புகளையும், நிறுவன கலாச்சாரத்தையும் கலைக்கும் நடவடிக்கைகளை சிறிலங்காவின்  புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *