மேலும்

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா உதவ வேண்டியுள்ளது – அதுல் கெசாப்

Atul Keshapசிறிலங்காவில் வாழும் பல்வேறு இன மற்றும் மதக்  குழுக்களிடையே  நிலையான அமைதியையும், கூட்டுறவையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருப்பதாக, சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக அமெரிக்க அதிபரால் முன்மொழியப்பட்டுள்ள அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரால் சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக ஒபாமா நிர்வாகத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அதுல் கெசாப், அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் முன்பாக நேற்று கொள்கை விளக்கம் அளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் செனட் வெளியுறவுக் குழு முன்பாக உரையாற்றுகையில்,

“சிறிலங்காவின் மத மற்றும் இனக் குழுக்களுக்கு இடையே நிலையான அமைதியையும் கூட்டுறவையும் கட்டியெழுப்ப நாம் உதவ வேண்டியுள்ளது.

போரினால் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், நிலையான அமைதியை நெருங்க முடியும்.

இந்த உரிமையைப் பெறுவது முக்கியமானது. சிறிலங்கா மக்களின் இந்த முயற்சிக்கு ஐ.நாவும் அனைத்துலக சமூகமும் பயனுள்ள வகையில் உதவ முடியும்.

ஜனநாயகம், சிவில் சமூகம், மற்றும் ஊடக சுதந்திரம், மத சுதந்திரம் உள்ளிட்ட மனிதஉரிமைகளைப் பலப்படுத்த சிறிலங்கா மக்களுக்கு நாம் உதவ வேண்டியுள்ளது.

பொருளாதார ரீதியாக, சிறிலங்காவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது.

அதேவேளை, எமது வர்த்தக பெறுமானம் குறைவானது.  எமது பங்குடமையை  விரிவாக்கிக் கொள்வதற்கு  மிகப்பெரிய வாய்ப்பு அங்கு உள்ளது.

அனர்த்த நிவாரணப் பணிகளிலும், இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்புக்கும் நெருக்கமான ஒத்துழைப்புக்கும் இடமுள்ளது.

சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில், சிறிலங்கா ஒரு பிராந்தியத் தலைவராக உள்ளது.

ஐ.நா அமைதி நடவடிக்கைக்கு பங்காற்றுவதுடன், போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மற்றும் கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.

இந்தோ- பசுபிக்  பிராந்தியத்தில் எமது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கான முக்கிய பங்குதாரராக சிறிலங்கா இருக்கும்.”  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுல் கெசாப்பின் நியமனத்தை அமெரிக்க செனட் உறுதிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *