மேலும்

20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

tnaதேர்தல்முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச்சட்ட யோசனை, சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனை ஒருபோதும், ஆதரிக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று மாலை வவுனியாவில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தீர்மானத்தை எடுத்தனர்.

இந்தக் கூட்டத்தில் முக்கியமாக 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவே விரிவாக ஆராயப்பட்டது.

அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில்  வேட்பாளர் பட்டியலில் கட்சிகளுக்கான ஆசனப் பங்கீடுகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முன்னேற்றகரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இறுதி முடிவு எட்டப்படவில்லை..

இந்தக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என்.சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன் ஆகியோரும், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தையா சிவநேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.