மேலும்

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கும் திட்டம்

mangrovesசிறிலங்காவின் புதிய சதுப்புநிலப் பாதுகாப்புத் திட்டம் உலகின் முதலாவது நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் ஒரு திட்ட முயற்சியாகக் காணப்படுகிறது.

கிழக்கில் உள்ள அம்பன்தோட்டம்  என்கின்ற கிராமத்தின் மீனவர் சமூகத்தின் தலைவியான மைக்கேல் பிரியதர்சினி போன்ற பெண்களின் கைகளிலேயே சிறிலங்காவின் சதுப்பு நிலப் பாதுகாப்புத் திட்டம் தற்போது தங்கியுள்ளது.

பிரியதர்சினியும் அவரது தோழிகளும் முதலில் சதுப்புநிலமானது குறிப்பாக மீனவ சமூகம் உட்பட நாட்டின் சூழல் பாதுகாப்பிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்திருக்கவில்லை. கரையோரக் காடுகளைப் பராமரிப்பது தொடர்பான நுண்கடன் திட்டம் வழங்கப்பட்டு அதற்கான திட்டம் அமுல்படுத்தப்பட்ட போதே இதன் மூலம் எவ்வளவு தூரம் நலன் பெறமுடியும் என்பதைப் புரிந்துகொண்டனர்.

‘நாங்கள் இப்போது சதுப்புநிலப் பாதுகாப்புத் தொடர்பாக அறிந்துள்ளோம். எங்களின் மூலம் எமது கணவன்மார் மற்றும் சமூகத்தவர்களும் இது தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர்’ என பிரியதர்சினி தெரிவித்தார்.

1997 இலிருந்து கரையோர சூழலைப் பாதுகாப்பதற்காகப் பணிபுரியும் தேசிய நிறுவனமான சுதேசா, சதுப்பு நிலக் காடுகளுக்கு அண்மையில் வசிக்கும் பெண்களுக்கு 50 டொலர்கள் தொடக்கம் 2000 டொலர்கள் வரை கடனாக வழங்கி வருகிறது.

தற்போது இந்தத் திட்டம் இலங்கைத் தீவு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சுதேசா  நிறுவனம், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சூழல் பாதுகாப்புக் குழுவான Seacology ஆகியன இணைந்து 3.4 மில்லியன் டொலர்கள் செலவில் சதுப்பு நிலப் பாதுகாப்புத் திட்டம் ஒன்றை நாடு முழுவதிலும் ஆரம்பித்துள்ளன.

தனது நாட்டிலுள்ள சதுப்பு நிலக்காடுகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கிய முதலாவது நாடாக சிறிலங்கா விளங்குகிறது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கரையோர நீரேரிகளில் இயற்கை வட்டச் செயற்பாடு மூலம் சதுப்புநில மரங்கள் உப்புநீரில் வளர்க்கப்படுகின்றன. மீன் மற்றும் இறால் போன்ற நீர் வாழும் உயிரினங்கள் இந்த மரங்களின் ஆழமான வேர்களின் மூலம் சுவாசிக்கின்றன. ‘இவ்வாறு வளர்க்கப்படும் மரங்கள் காற்று மற்றும் கனமழை போன்றவற்றுக்கு எதிரான தடுப்பு அரணாக விளங்குவதாக சதுப்புநிலக் காட்டுப் பகுதிகளுக்கு அருகில் வாழும் மக்கள் கூறுகின்றனர்’ என சிறிலங்கா சிறிய மீனவர் ஒன்றியமான சுதேசா  நிறுவனத்தின் கரையோரப் பாதுகாப்பிற்கான இயக்குனர் டக்ளஸ் திசேரா தெரிவித்துள்ளார்.

சதுப்பு மண்ணானது கார்பனை சேமித்து வைப்பதுடன், நிலக்கீழ் மண்ணிலிருந்து சில மீற்றர் உயரத்திற்கப்பால் தனிமைப்படுத்தி வைப்பதற்கும் உதவுகிறது. ஏனைய மரங்களை விட இது நீடித்து நிலைத்துள்ளது.

சதுப்புநிலக் காடுகளைப் பராமரிப்பது தொடர்பாக கற்றுக்கொண்டுள்ளதாக கற்பிட்டியைச் சேர்ந்த 23 கிராமங்களின் பெண்களை ஒன்றிணைக்கும் குழுவைத் தலைமை தாங்கும் கே.டி.விஜிதா தெரிவித்தார். ‘நாங்கள் இந்தக் காடுகள் பாதுகாப்பாக உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறோம்’ என இவர் தெரிவித்தார்.

தான் சிறியதொரு வெதுப்பகத்தை நடத்துவதற்கான பயிற்சியையும் நிதி உதவியையும் சுதேசா  நிறுவனத்தின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் தான் தனது நோயாளிக் கணவனையும் நான்கு பிள்ளைகளையும் பராமரிக்க முடிவதாகவும் புத்தளம் மாவட்டத்தின் வடமேற்குக் கிராமமான சமாடிகமவைச் சேர்ந்த கிறிஸ்ரினா ஜோஸ்பின் தெரிவித்தார்.

வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையிலுள்ள வறுமைக் கோட்டிற்குட்பட்ட பெண்களை இலக்குவைத்தே தாம் தமது கடன் திட்டத்தை அமுல்படுத்துவதாக சுதேசா  நிறுவனத்தின் கடன் வழங்கும் அதிகாரி சுவினேதா டீ சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா முழுமையும் அமுல்படுத்தப்படும் புதிய திட்டத்தின் மூலமாக இந்நாட்டின் 48 கடல்நீரேரிகளைச் சூழவுள்ள 1500 குழுக்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 15,000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களும் நுண்கடன்களும் வழங்கப்பட முடியும். இந்தக் குழுக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட சதுப்புநிலக் காடுகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்புடையவர்களாவர்.

சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பதற்கான மாதிரித் திட்டங்கள் மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும் 2000 வரையான கடன்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனர் டுவானே சில்வஸ்டீன் தெரிவித்துள்ளார்.

‘100 டொலர்கள் வரை மிகக் குறைந்த கடனாக வழங்கப்படுகின்றன. இதில் சில பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் ஏற்கனவே மேலும் சில பெண்களுக்குத் தொழில் வாய்ப்பை வழங்கியுள்ளனர்’ என இயக்குனர் மேலும் குறிப்பிட்டார்.

‘புதிய திட்டத்தின் கீழ் கணவனை இழந்த பெண்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிக கடன்கள் வழங்கப்படவுள்ளன. மீதிக் கடன்கள் பாடசாலையிலிருந்து வெளியேறிய ஆண் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படவுள்ளன’ என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு சமுதாயக் குழுக்களும் 21 ஏக்கர் சதுப்பு நிலக்காடுகளுக்குப் பொறுப்புடையவர்கள் என சுதேசா  மற்றும் Seacology ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தக் காடுகளில் கண்காணிப்பு சேவையில் ஈடுபடுவதற்கான ஆளணியை வழங்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 9600 ஏக்கர் சதுப்பு நிலப்பகுதிகளில் மீளவும் மரங்களை நடுவதற்கான நிகழ்ச்சித் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 21,782 ஏக்கர் சதுப்பு நிலக்காடு மைத்திரிபால அரசாங்கத்தின் கீழ் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இக்காட்டுப் பகுதியானது வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இது மிகவும் முக்கிய தீர்மானமாகும். ஏனெனில் இலங்கைத்தீவு முழுமையிலும் காணப்படும் சதுப்புநிலக் காடுகள் வனவளத் திணைக்களத்தால் பாதுகாக்கப்படுகிறது’ என சுதேசா  நிறுவனத்தின் தலைவர் அனுராதா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்று பத்தாண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவில் 40,000 ஹெக்ரேயர் சதுப்பு நிலக்காடு காணப்பட்டதாக திசேரா குறிப்பிடுகிறார். ஆனால் வர்த்தக நோக்கங்களுக்காகவும், விறகுக்காகவும் சதுப்பு நிலக்காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது.

‘உள்நாட்டுப் போரின் அச்சுறுத்தலே சதுப்பு நிலக் காடுகளுக்கான முதன்மையான அச்சுறுத்தலாகக் காணப்பட்டது. விறகுக்காக மக்கள் சதுப்புக்காடுகளை அழிப்பதும் பிரதான அச்சுறுத்தலாகும்’ என Seacology நிறுவனத்தைச் சேர்ந்த சில்வெஸ்டீன் குறிப்பிட்டார்.

1990களில் வர்த்தக சார் இறால் வளர்ப்புப் பண்ணைகள் நோய் காரணமாகக் கைவிடப்பட்டதால் சதுப்புநிலக் காடுகள் அழிவடைந்தன.

புதிய சதுப்புநிலப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தென்னம் மட்டைகள் போன்ற விறகாகப் பயன்படுத்தக் கூடியவற்றைப் பெறக்கூடிய மரங்கள் வளர்க்கப்படவுள்ளன.

சிறிலங்கா அரசாங்கமானது சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பதற்காக காண்பிக்கும் ஆர்வமானது பிற நாடுகளும் இதனைப் பின்பற்ற வழிசமைக்கும் என சில்வஸ்டீன் குறிப்பிடுகிறார்.

சதுப்பு நிலக் காடுகளில் மீள்வனமாக்கலை மேற்கொள்வதற்கு தேசிய இராணுவப் படையினர் உதவுவார்கள் என பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளுர் சமூகங்கள் இந்தத் திட்டத்தை எவ்வளவு தூரம் ஆர்வத்துடன் முன்னெடுக்கின்றனர் என்பதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளதாக சுதேசா நிறுவனத்தைச் சேர்ந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

‘சதுப்பு நிலக்காடுகள் இந்த மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் உதவும் என்பதை நாங்கள் மக்களுக்கு விளக்கவேண்டிய தேவையுள்ளது’ என விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வழி மூலம்       – ரோய்ட்டர்ஸ்
ஆங்கிலத்தில்  – அமந்தா பெரேரா
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *