மேலும்

சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்த தேர்தல்முறை மாற்றம் சிறுபான்மையினரைப் பாதிக்கும் – கபே

keerthi tennakoonசிறிலங்கா பிரதமரினால் முன்வைக்கப்பட்டு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச்சட்ட யோசனை சிறுபான்மையினர் மற்றும் சிறுகட்சிகளைப் பாதிக்கும் என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) தெரிவித்துள்ளது.

அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகையை 225ஆக வைத்து தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை 125க்கு மட்டுப்படுத்துவது சிறுபான்மையினரையும் சிறிய கட்சிகளையும் வெகுவாக பாதிக்கும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

20ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியான விடயம்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆகவும் தேர்தல் தொகுதியின் எண்ணிக்கையை 125ஆகவும் மட்டுப்படுத்துவது, சிறிய அரசியல் கட்சிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நாட்டு மக்கள் நீண்டகாலம் எதிர்பார்த்த ஒரு திருத்தமாக இருந்தபோதும் அதன் ஆரம்பகால வரைபுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 – 235ஆக இருக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

சிறுகட்சிகளுக்கும் சிறுபான்மையினருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவே அந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்கள், வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், ஜேவிபி , ஜாதிக ஹெல உறுமய போன்ற சிறு கட்சிகளுக்கு தனது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்வதற்கு உறுப்பினர் தொகையை அதிகரிப்பது அவசியம்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்தின்படி மூன்று பாரிய பிரச்சினைகள் உள்ளன.

  1. 125 தேர்தல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்கு அதிக காலம் தேவைப்படும்,

2. சிறுபான்மையினரின் அங்கத்துவத்துக்கு தேவையான இரட்டை தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்க முடியாது போகும்.

  1. வடக்கு பகுதியில் வாழும் சிங்கள மக்களதும் வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இது பாரிய சவாலாக அமையும்.

இந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தால் அது நிறைவேற்றாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன், மக்கள் வெறுக்கும் தேர்தல் முறையும், சாதாரண தர பரீட்சை கூட சித்தி அடையாத 94 உறுப்பினர்களையும், உயர்தர சித்தி அடையாத 142 உறுப்பினர்களையும்,  ஐந்து வீதத்துக்கும் குறைந்த பெண் உறுப்பினர்களையும் கொண்ட- இதுபோன்ற ஒரு நாடாளுமன்றம் மீண்டும் உருவாகலாம்.

ஆகவே அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட திருத்தம் இன்றைய தேவைக்கு ஏற்றவாறு மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *