மேலும்

என்னை எல்லோரும் கழுத்தறுத்து விட்டனர் – மகிந்த ராஜபக்சவின் புலம்பல்

mahinda-afp (1)சிங்களத் தேசியவாத அமைப்பான பொது பலசேனா, தன்னைத் தோற்கடிப்பதற்கான மேற்குலகத்தின் சதி என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சிறுபான்மை முஸ்லிம்களைப் பகைத்துக் கொள்ளவும், என்னைத் தோற்கடிக்கவும், மேற்குலகத்தின் சதியால் உருவாக்கப்பட்டதே பொது பல சேன.

எனக்கோ, கோத்தாபய ராஜபக்சவுக்கோ, பொதுபல சேனாவுடன் எந்த தொடர்பும் இல்லை.

பொது பலசேனா நோர்வே, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டது. இதிலிருந்து இது ஒரு எதிர்க்கட்சி சதி என்பது தெளிவாகிறது.

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பரவலான தாக்குதல்களை மேற்கொண்ட பொதுபல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயன்ற போது, ஜாதிக ஹெல உறுமய தலைவர் சம்பிக்க ரணவக்கவே பொது பலசேனாவை அப்போது பாதுகாத்தார்.

உண்மையில் பொது பலசேனா எனது நலன்களுக்கு எதிராகவே செயற்பட்டது.

பொது பலசேனாவின் நடவடிக்கைகளால், முஸ்லிம்கள் என்னை விட்டு விலகியதால் தான், ஜனவரி 8 தேர்தலில் தோல்வியடைந்தேன்.

நான் அதிபராக இருந்த போது, ஊழல், மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தண்டிக்கவில்லை.

மேர்வின் சில்வா அரசு அதிகாரிகளை மரத்தில் கட்டி வைத்த போது, நான் கண்ணை மூடிக் கொண்டிருந்து விட்டேன். நான் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

நான் எனது அமைச்சர்களை அதிகமாக நம்பி விட்டேன். அவர்கள் செய்தவற்றையெல்லாம் கண்டும் காணாமல் இருந்தது தவறு என்று எனக்கு இப்போது தெரிகிறது.

புதிய அரசாங்கம் எனது குடும்பத்தினரை உளவு பார்த்து வருகிறது.

எனது பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியும், உணவு சுவை பார்ப்பவரும் எனக்குத் துரோகம் செய்து விட்டனர்.

எனது பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த பிரதிக் காவல்துறை மா அதிபர், எஸ்.எம்.விக்கிரமசிங்க, எனது அரசியல் செயற்பாடுகள் குறித்த தகவல்களை அரசியல் எதிரிகளுக்குப் பரிமாறி வந்துள்ளார்.

ஜனவரி 8 அதிபர் தேர்தலில் அதனால் தான் தோல்வி ஏற்பட்டது.

அதிபர் பாதுகாப்புப் பிரிவும், அதன் தலைவரும் எனக்கு கழுத்தறுத்து விட்டனர். எனது உணவு சுவை பார்ப்பவரும் கூட, எனக்குத் துரோகம் செய்து விட்டார்.

கடற்படை அதிகாரியாக உள்ள எனது இரண்டாவது மகனை அரச புலனாய்வுச் சேவை பின்தொடர்ந்து வருகிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *