மேலும்

காணாமற்போனோர்: புதிய அரசினாலும் தீர்க்கப்படாத பிரச்சினை – கொழும்பு ஆங்கில நாளிதழ்

missing1971லிருந்து நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கிளர்ச்சிகளின் போதும் மோதல்களின் போதும் மக்கள் காணாமற் போவதற்கு அரச பயங்கரவாதமே காரணமாகும். தனது சொந்த நாட்டு மக்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை செய்வதில் சிறிலங்கா அரசாங்கம் தாமதம் காண்பிக்கிறது.

இவ்வாறு ‘சிலோன் ருடே’ நாளிதழின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன 12.1 மில்லியன் மொத்த வாக்குகளில் 52 சதவீத வாக்குகளைப் பெற்று,  தனது பிரதான எதிர்வேட்பாளரான மகிந்த ராஜபக்சவை 449,072 பெரும்பான்மை வாக்குகளால், தோற்கடித்து நாட்டின் அதிபரானார்.

இத்தேர்தலில் சிறிசேன 6.2 மில்லியன் வாக்குகளையும் ராஜபக்ச 5.8 வாக்குகளையும் பெற்றனர்.

சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் வாழும் ஐந்து தேர்தல் தொகுதிகளிலும் சிறிசேன ஆகக் குறைந்தது 62 சதவீத வாக்குகள் தொடக்கம் ஆகக் கூடிய 82 சதவீத வாக்குகளைப் பெற்றார். வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களால் சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 978,111 ஆகும்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் மாவட்டங்களிலும் சிறிசேன 604,413 வாக்குகளைப் பெற்றார். சிறிசேன பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் 21.8 சதவீதமானவை தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர் வாழும் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டவையாகும்.

அதிபரின் நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்துதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதன் ஊடாக பேரினவாத ஆட்சியை மாற்றுதல் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை சிறிலங்கா அதிபர் சிறிசேன தனது தேர்தல் பரப்புரையில் வழங்கியிருந்தார்.

சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், நாட்டில் மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படுவது குறைந்துள்ள போதிலும், முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. இவ்வாறான மத வன்முறைகளில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்புக்கள் சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட்டன.

19வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதன் மூலம் நிறைவேற்று அதிபர் முறைமையிலுள்ள அதிகாரங்கள் சிலவற்றை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக, வடக்கில் பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தனியார் சொத்துக்கள் அதனுடைய உரிமையாளர்களிடம் மீளவும் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் இது முற்றிலும் நிறைவடையவில்லை.

தமிழ் மக்களின் சில அவாக்களைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்த போதிலும், சிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாக எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.

போரின் போது காணாமற் போனவர்களில் ராஜபக்சவின் 10 ஆண்டுகால ஆட்சியின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாக இன்னமும் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. சிறிலங்காவில் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் சார்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், செப்ரெம்பர் மாதத்தில் மனித உரிமைகள் பேரவை ஜெனீவாவில் கூடும் போது காணாமற் போனவர்கள் தொடர்பாக சிறிலங்கா முழுமையான விசாரணையைக் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் 1971ல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது அன்பிற்குரியவர்கள் கொல்லப்பட்டும் காணாமற் போன போதும் கூட இந்த விடயத்தில் சிங்கள சமூகமூம் அனைத்துலக சமூகமும் அமைதி காத்தன. இதன்போது 13,000 வரையானவர்கள் காணாமற் போயினர் அல்லது படுகொலை செய்யப்பட்டனர்.

இதேபோன்று, 1987-90 களில் தென்னிலங்கையில் தொடரப்பட்ட கிளர்ச்சிகளில் சிங்களவர்கள் பாதிக்கப்பட்ட போதிலும் குறிப்பாக இதில் ஜே.வி.பி தலைவர் றோகண விஜயவீர படுகொலை செய்யப்பட்ட போதிலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சமூகம் அமைதி காத்தது.

சிறிலங்கா அரசால் அரங்கேற்றப்பட்ட இவ்விரு கிளர்ச்சிகள் தொடர்பாக அனைத்துலக சமூகம் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. இதில் காணாமற் போன தமது உறவினருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்றளவும் எதுவும் தெரியாது.

ஜனவரி 2010ல் அதிபர் தேர்தல் இடம்பெற்ற போது காணாமற் போன கேலிச்சித்திர வடிவமைப்பாளரான பிரகீத் எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது என்பதை இவரது குடும்பத்தினர் இன்னமும் அறியவில்லை.

1971லிருந்து நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கிளர்ச்சிகளின் போதும் மோதல்களின் போதும் மக்கள் காணாமற் போவதற்கு அரச பயங்கரவாதமே காரணமாகும். தனது சொந்த நாட்டு மக்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை செய்வதில் சிறிலங்கா அரசாங்கம் தாமதம் காண்பிக்கின்றது.

ஆகவே கடந்த காலத்தில் சிறிலங்காவில் காணாமற் போன சம்பவங்கள் பல நடந்த போதும் அனைத்துலக சமூகம் வாளாதிருந்துள்ளதால், தற்போது சிறிலங்காவில் நடந்தேறிய பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகம் அமைதி காப்பதானது எவ்வித ஆச்சரியமளிக்கும் விடயமல்ல.

சிறிலங்காவில் தற்போது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணை செய்வதன் மூலம் சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை இழப்பதற்கு சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை.

காணாமற் போன தமிழ் மக்கள் தொடர்பாக விசாரணை செய்வதானது தேர்தலில் வாக்களிப்பதற்குத் தடையாக இருக்கும் எனவும் இது ஒரு சிக்கலான விடயமாக உள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது.

மீண்டும் அரசியலில் உள்நுழைய முற்படும் ராஜபக்சவுக்கு சிங்கள சமூகத்தின் அறுதிப் பெரும்பான்மை வாக்குப் பலமுண்டு. ஆனாலும் இது கடந்த தேர்தலில் பயனளிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக, 2010 சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஆறு மில்லியன் வரையான வாக்குகளைப் பெற்ற ராஜபக்ச 2015 அதிபர் தேர்தலில் 5.7 மில்லியன் வாக்குகளையே பெற்றிருந்தார். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் 1.8 மில்லியன் புதிய வாக்காளர்கள் தமது வாக்குகளை வழங்கிய போதிலும் ராஜபக்சவின் வாக்குகள் குறைவடைந்தன.

ஆகவே சிங்கள பௌத்த வாக்காளர்களுக்கு மத்தியில் இனவெறி என்பது நீண்ட காலத்திற்குப் பயனளிக்காது என்பதையே இது சுட்டிநிற்கிறது.

போரின் போது காணாமற் போன தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமே நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுமலர்ச்சிகள் பயனளிக்கும். இதுவே நாட்டின் நீண்ட கால நலனை உறுதிப்படுத்தும்.

அடுத்த தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அதன்பிறகே ராஜபக்சவால் இழைக்கப்பட்ட குற்றங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஆகவே செப்ரெம்பருக்கு முன்னர், பொதுத் தேர்தலை மேற்கொள்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படலாம். தேர்தலின் மூலம் ஆட்சிக்கு வரும் புதிய அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களைத் தீர்ப்பதற்கான காலக்கெடுவை அனைத்துலக சமூகமானது மார்ச் 2016 வரை நீட்டிப்பதற்கான அனுமதியை வழங்கக் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *