மேலும்

தாமரைக் கோபுரம் கண்காணிப்பு அரண் அல்ல – இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கிறது சீனா

lotus-tower-srilankaதற்போது கொழும்பில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரத்தைப் பயன்படுத்தி சீனா, இந்தியா மீது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைவதாக இந்திய ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சீன ஒப்பந்தக்காரர்கள் நிராகரித்துள்ளனர்.

இக்கோபுரமானது தொலைத் தொடர்பாடல் கட்டுப்பாட்டு ஆணையாகத்திற்குச் சொந்தமானது எனவும் சீன ஒப்பந்தக்காரர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரம் முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்படும் போது, 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக அமைந்திருக்கும்.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தமானது சிறிலங்கா தொலைத் தொடர்பாடல் கட்டுப்பாட்டு ஆணையகத்திற்கும் சீனத் தேசிய இலத்திரனியல் ஏற்றுமதி இறக்குமதி கூட்டுத்தாபனத்திற்கும் (CEIEC) மற்றும் Long-March International Trade Company Limited (ALIT)  என்கின்ற சீன நிறுவனத்திற்கும் இடையில் 2012 ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராக இலத்திரனியல் கண்காணிப்பை மேற்கொள்வதற்கு ஏதுவாகவே கொழும்பு தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்படுவதாக இந்திய ஆய்வாளர்கள் சிலர் குற்றம்சாட்டியதாகவும் ஆனால் இதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் CEIEC நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

‘இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். ஏனெனில் இத்திட்டமானது சிறிலங்கா தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்திற்குச் சொந்தமானதாகும்.

தாமரைக் கோபுரத்தில் டிஜிற்றல் பிராந்திய தொலைக்காட்சி ISDB-T  ,தொலைத்தொடர்பாடல்கள், பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வசதிகள் போன்றன உருவாக்கப்படவுள்ளன. இவை இலங்கையர்களாலேயே பயன்படுத்தப்படும்.

இக்கோபுரமானது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும்.

இந்தியாவால் குற்றம்சாட்டப்பட்டது போன்று இந்தக் கோபுரத்தில் இலத்திரனியல் கண்காணிப்பு வசதிகள் ஏதும் இருக்காது. டிஜிற்றல் ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான சமிக்கை பெறும் கருவியிலேயே கண்காணிப்பு நடவடிக்கைகள் தங்கியுள்ளன.

இவை இரு வேறு எண்ணக்கருக்களையும் செயற்பாடுகளையும் கொண்டுள்ளன. ஆகவே இது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை. இத்திட்டத்திற்கான செலவீனம் நியாயமானது’ என CEIEC நிறுவனத்தின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா பல்வேறு சாதனைகளைப் புரியவேண்டும் என சீனா மனதார ஆசிர்வதிப்பதாகவும், இதற்காக எவ்வாறான உதவிகள் தேவைப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் சீனா தொடர்ந்தும் வழங்கும் எனவும் இதுதொடர்பாக தவறான சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் சீனா தொடர்ந்தும் சிறிலங்காவிற்கு கைகொடுக்கும் எனவும் CEIEC நிறுவனப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாமரைக் கோபுரமானது உண்மையில் பெலியாகொட நகரிலேயே நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது இறுதியில் மிகவும் அழகான பெய்ரா வாவிக்கு அருகில் மாற்றப்பட்டது.

இத்திட்டத்தின் முன்மொழிவின் பிரகாரம், தாமரைக் கோபுரத்தின் பிரதான வருவாய் சுற்றுலாத்துறை மற்றும் ஒலி ஒளிபரப்பு சாதனத்தை வாடகைக்கு விடுதல் போன்றவற்றிலேயே தங்கியிருக்க வேண்டும்.

இது வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி ஒளிபரப்பு சாதனமான ISDB-Tக்கு ஏற்பவே தொழிற்படும். ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட DVB-T2  கட்டமைப்பானது 50 தொலைக்காட்சி சேவைகளுக்கும் 20 தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களுக்கும் தனது சேவையை வழங்கும்.

தொலைத் தொடர்பாடல்கள் அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைக்கப்படும். இதனுடைய அரங்கமானது ஆறு மாடிகளை உள்ளடக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரங்கத்தின் முதலாவது மாடியில் அருங்காட்சியகமும் இரண்டு கண்காட்சி மண்டபங்களும் அமைக்கப்படவுள்ளன. இரண்டாவது மாடியில் 400 பேர் ஒரே தடவையில் அமரக்கூடிய மாநாட்டு மண்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மாடியில் விடுதிகள், சிறப்புச் சந்தைகள், உணவகங்கள் போன்றனவும் நான்காவது மாடியில் 1000 இருக்கைகளுடன் கூடிய அரங்கமும் அமைக்கப்படும்.

ஐந்தாவது மாடியில் சொகுசு விடுதி அறைகள் மற்றும் மிகப் பெரிய நடன அறைகளும் அமைக்கப்படவுள்ளன.

ஆறாவது மாடியில் சிறப்பு அம்சங்களுடன் கூடிய மிகப் பாரிய நீர்ப் பூங்காவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *