மேலும்

தேர்தல் முறை மாற்றத்துக்கு சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் எதிர்ப்பு

minority-party-meetதற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு சிறிலங்காவின் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஆராய நேற்று, சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளின் கூட்டம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நேற்றுமாலை நடந்த இந்தக் கூட்டத்தில், ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் சங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈபிடிபி, தேசிய காங்கிரஸ்,  ஜனநாயக தேசிய முன்னணி,  முஸ்லிம், தமிழ் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

minority-party-meet

இந்தக் கூட்டத்தில், புதிய தேர்தல் முறை ஒன்றை வரைவதில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு, சிறபான்மை மற்றும் சிறுகட்சிகளின் சார்பில் கூட்டுக் குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், உடனடியாக தேர்தல் முறையை மாற்றக் கூடாது என்றும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை தற்போதைய, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழேயே நடத்த வேண்டும் என்றும், இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதிய தேர்தல் முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், அதுகுறித்து வாக்காளர்களுக்கு, போதிய அறிவூட்டப்பட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நியமிக்கப்படும் குழு, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரை விரைவில் சந்தித்து புதிய தேர்தல் முறை குறித்து கலந்துரையாட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தில், விஜித ஹேரத், அதுரலியே ரத்தன தேரர், டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் ரவூப் ஹக்கீம், முத்து சிவலிங்கம், மனோ கணேசன். அமைச்சர் திகாம்பரம், அமைச்சர் ரிசாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாவுல்லா, குமரகுரபரன், அசாத் சாலி, ஆனந்தசங்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *