மேலும்

ஆதரவாளர்களுடன் மகிந்த முக்கிய சந்திப்பு – 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

mahindaதன்னைப் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு வலியுறுத்தி வரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்பு மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான தங்காலையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில். 19வது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச எந்த அரசியல் கட்சியின் மூலம் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது என்பது குறித்தும், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமக்கு பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்தால், பொதுஜன ஐக்கிய முன்னணி மூலம், தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

இன்றைய  சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, கீதாஞ்சன குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, மகிந்த யாப்பா அபேவர்த்தன, ரி.பி.எக்கநாயக்க, குமார வெல்கம,அருந்திக பெர்னான்டோ, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, சரத் வீரசேகர, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சேனக விதானகமகே, மகிந்தானந்த அளுத்கமகே, சாலிந்த திசநாயக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *