மேலும்

சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உடனடியாக விலகும் சாத்தியம் இல்லை

eu-flagசிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள, மீன் ஏற்றுமதித் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும் சாத்தியங்கள் இல்லை என்றும், இந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே தடை நீக்கம் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி விதிமுறைகளை நிறைவேற்றத் தவறியதால், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம், சிறிலங்காவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.

எனினும், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து, இந்த மீன் ஏற்றுமதி தடையை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அரசியல், இராஜதந்திரச் செல்வாக்கின் மூலம், அதனை நீக்குவதற்கான உடனடி முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும், சிறிலங்கா மீன்பிடிப் படகுகளில், தேவையான தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும், கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1500 இற்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை, கரையில் உள்ள மத்திய நிலையம் ஒன்றுடன் இணைப்பை ஏற்படுத்திக் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

இதற்கென, படகுகளில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இன்னும் 3-4 மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்து விடும் என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சின் செயலர் நிமால் ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே சிறிலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள மீன்பிடித் தடை விலக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாக, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சிறிலங்கா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *