மேலும்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மைத்திரி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – இரா.சம்பந்தன்

R.sampanthanமைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள், கொழும்பில் நேற்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர்.

கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர்; உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர்.

இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பி மைத்திரி அரசை ஆட்சிபீடத்தில் ஏறவைத்தனர் தமிழ் மக்கள்.

மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகின்றன. இந்த அரசின் ஆட்சிக்காலத்தில் இதுவரைக்கும் கெடுபிடிகள் இல்லை. ஆனால், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு தாமதம் காட்டுகின்றது.

காலஅவகாசம் வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மைத்திரி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். இதற்கு சர்வதேசம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.

வலிகாமம், சம்பூர் மட்டுமல்ல, வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.

மக்கள் வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடு நிறுத்தப்படவேண்டும். வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல்போனோர் மற்றும் இரகசியத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டோர் தொடர்பில் அரசு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளோம்.

அத்துடன், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மைத்திரி அரசு உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும், இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்க செனட் குழுவினர் யாழ்ப்பாணம் சென்று, வடக்கு மாகாண முதல்வர் உள்ளிட்டோருடனும் கலந்துரையடியிருந்தனர்.

இதன்போது வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும், தமிழர்களின் பிரச்சினைகள் விடயத்தில் புதிய அரசாங்கம் மெத்தனப் போக்குடனேயே நடந்து கொள்வதாகவும் மெதுவாகவே செயற்படுவதாகவும் அமெரிக்க செனட் குழுவினரிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *