மேலும்

பட்டதாரிகளுக்கு வடக்கு மாகாணசபை ஆசிரியர் நியமனம் – முதல்முறையாக கிடைத்த அதிகாரம்

NPC-appoinmentவடக்கு மாகாணசபை முதல்முறையாக, சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகளின்றி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் சத்தியசீலன் தலைமையில் இன்று நடந்த நிகழ்வில், 248 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுனரின் ஒப்புதலுடன் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்குரிய அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், வடக்கு மாகாணசபை பதவிக்கு வந்த பின்னர், முதற் தடவையாக இப்போதுதான் அந்த சபையினால் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னைய ஆட்சிக்காலத்தில், வடக்கு மாகாணசபையின் நியமனங்கள் அனைத்தையும், மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுனரே கையாண்டு வந்திருந்தார்.

இன்று பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில், உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ‘கடந்த ஆண்டில் அதிகாரங்கள் வழங்கப்படாதிருந்தது. இப்போது படிப்படியாக அதிகாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுதொடர்பில் பிபிசியிடம் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலர் ஜோசப் ஸ்டாலின், ‘வடக்கு மாகாணசபையைத் தவிர்ந்த ஏனைய மாகாணசபைகள் இதுவரையில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கியிருக்கின்றன.

ஆனால் இப்போதுதான் வடக்கு மாகாணசபைக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் வடக்கு மாகாணசபைக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. வன்னியில் பல பிரதேசங்களில் மோசமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதனைப் போக்குவதற்கு அரசாங்கம் வடக்கு மாகாணசபைக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *