மேலும்

ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று சிறிலங்காவுக்கு வருகிறார்

Special Rapporteur Pablo de Greiffசிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும், மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் என்ற நிபுணரே இன்று சிறிலங்கா வரவுள்ளார்.

ஆறு நாள்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கும் இவர், அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

கடந்த ஜனவரி மாதம், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சிறிலங்காவுக்கு வருகை தரும் ஐ.நாவின் முதலாவது உயர்மட்டப் பிரதிநிதி இவரேயாவார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவர் கொழும்பு வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா நிபுணரின் இந்தப் பயணம் ஒரு ஆய்வு மற்றும் கலந்தாலோசனைக்கானது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உண்மை, நல்லிணக்க செயல்முறைகள் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்வதற்கு, ஏற்கனவே தென்னாபிரிக்க அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்தப் படிமுறையை நோக்கிய மற்றொரு அடியாகவே இந்தப் பயணம் அமையும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு அரசாங்கங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள், உண்மை ஆணைக்குழுக்கள்,  பால்நிலை விவகாரங்கள், நீதி, பாதுகாப்பு, அபிவிருத்திக்கிடையிலான தொடர்புகள் குறித்த ஆலாசனைகளை வழங்குவதற்காக, பப்லோ டி கிரெய்ப், 2012ம் ஆண்டு ஐ.நா சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *