மேலும்

சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா

buddhistசீன ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான இந்திய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, சிறிலங்காவின் பௌத்த பீடங்களின் முக்கிய பௌத்த பிக்குகளை புதுடெல்லிக்கு அழைத்து, நாலந்தா மரபு பிக்குகளுடன், பேச்சுக்களை நடத்த இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

பிராந்தியத்தில் சீனாவின் தலையீட்டை முறிடியப்பதற்காக,  கொழும்புடனான தொடர்புகளை ஆழப்படுத்தி வரும் இந்தியா, சிறிலங்காவின் தேரோவாத பௌத்த பிக்குகளையும், நாலந்தா மரபைப் பின்பற்றும், பௌத்த பிக்குகளையும், புதுடெல்லியில்  முதல் முறையாகச் சந்தித்துப் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், தலாய்லாமாவை இன்று சந்திக்கவுள்ள சிறிலங்கா பௌத்த பிக்குகள், அவரைத் தமது நாட்டுக்கு அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தமாத இறுதியில் பீங்கிற்கு மேற்கொள்ளவுள்ள முதலாவது பயணத்துக்குப் பின்னர், முறைப்படியான அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலாய்லாமாவுடனான சந்திப்புக்குப் பின்னர், சிறிலங்காவிலிருந்து வந்துள்ள பௌத்த பிக்குகள் குழுவும், நாலந்தா மரபைக் கடைப்பிடிக்கும் பௌத்த பிக்குகளின் குழுவும், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜுஜுவின் அதிகாரபூர்வ இல்லத்தில், தேனீர் விருந்துடனான சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாலந்தா குழுவில், திபெத் நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் பிரதமரான, சம்டொங் ரின்பொச்சும் இடம்பெறவுள்ளார்.

buddhist

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்தவாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்த பின்னணியில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

சிறிலங்கா மற்றும் நாலந்தா பௌத்த பிக்குகள் நேற்றுமுன்தினம் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இந்தப் பேச்சுக்களுக்கு அனைத்துலக பௌத்த சம்மேளனம் எற்பாடு செய்திருந்தது. இது இந்திய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகும்.

இதுபோன்றதொரு சந்திப்பு கடைசியாக 7ம் நூற்றாண்டில், ஹர்சவர்த்தன பேரரசரால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக, காடென் சர்ட்சே மடத்தின் தலைவர் ஜங்சுப் சோடென் தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்காவில், இந்தியப் பிரதமரை மகாபோதி சமூகத்தில் வரவேற்ற, மகாபோதி சமூகத்தின் தலைவரான பனகல  உபதிஸ்ஸ தேரர், தலாய்லாமா ஒருபோதும் சிறிலங்காவுக்கு வரவில்லை என்றும், இன்று அவரைச் சந்திக்கும் போது, அவருக்கு அழைப்பு விடுவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைத்து வர முயற்சித்தேன். ஆனால் அரசியல் காரணங்களால் இந்த முயற்சி தடைப்பட்டு விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான சீனாவின் செல்வாக்கினால், தலாய்லாமைாவை அழைக்கும் முயற்சிகள் ஒருவேளை தடைப்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திபெத்தியர்களின் தலைவர் என்பதை புறக்கணித்து விட்டு, ஒரு மதத் தலைவர் என்ற வகையில் சிறிசேன அரசாங்கம்  தலாய்லாமாவின் வருகையை அனுமதிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி வந்துள்ள சிறிலங்கா குழுவில் அங்குள்ள நான்கு பௌத்த மகாநாயக்கர்களில், மூவர் மற்றும் ஏனைய உயர்மட்ட பிக்குகள், மதக் கோட்பாட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவில் அஸ்கிரிய மகாநாயக்கர் மட்டும் இடம்பெறவில்லை.

மோடி தனது சிறிலங்கா பயணத்தின் போது, மகாநாயக்கர்களை சந்தித்திருந்ததுடன், மகாபோதி மரத்தையும் தரிசனம் செய்திருந்தார்.

சிறிலங்காவில் உள்ள தேரோவாத பௌத்தமே, மியான்மார், தாய்லாந்து, லாவோசிலும் பெரும்பான்மையினரால் பின்பற்றப்படுகிறது.

நாலந்தா பௌத்த மரபு, இமாலயப் பகுதிகளில், அருணாசலப் பிரதேசம் தொடக்கம், லடாக் வரை, நேபாளம், பூட்டான், சிக்கிம் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளிலுள்ள மக்களால் பின்பற்றப்படுகிறது.

உலக பௌத்த  அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கும் உள்ள பௌத்த அமைப்புகளுக்கு கொடைகளை வழங்கி சீனா தனது பௌத்த இராஜதந்திரத்தை பயன்படுத்தி வருகிறது.

இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் பௌத்த தொடர்புகளை முறியடிக்கும் வகையில், மென்சக்திகளை உருவாக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>