மேலும்

சிறிலங்காவின் புதிய அரசுக்கு கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் மறுப்பு

imf-Todd Schneiderசீனாவிடம் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களில் ஒரு பகுதியை அடைப்பதற்கு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம்  விடுத்திருந்த கடன் கோரிக்கையை அனைத்துலக நாணய நிதியம் நிராகரித்து விட்டது.

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து, 4 பில்லியன் டொலர் கடனுதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியிருந்தது.

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்தமாதம் வோசிங்டனுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் இருந்து கடன்களை கோரியிருந்தார்.

ஆனால், சிறிலங்காவுக்கு ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்ட அனைத்துலக நாணய நிதியத்தின் நிபுணர்கள், சிறிலங்கா தற்போது உடனடி நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.

அனைத்துலக நாணய நிதியத்தின் நிபுணர் குழுவின் தலைவர் ரொட் சினேய்டர் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறிலங்காவின் வெளிநாட்டு  நாணயக் கையிருப்பு நல்ல நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம், 2.6 பில்லியன் டொலரை கடனாக வழங்கியிருந்தது.

“தற்போது நிலைமை முற்றிலும் வேறுபட்டது. எம்மால் நிலுவையாக உள்ள கொடுப்பனவு உதவியையே வழங்க முடியும்.” என்று நிபுணர் குழுவின் தலைவர் ரொட் சினேய்டர் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தை சிறிலங்கா கொண்டுள்ளது.

எனினும், கடந்த ஆண்டு நடுப்பகுதியில் சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன் 42.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

2013ம் ஆண்டு இறுதியில் சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன் 39.7 பில்லியன் டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *