மேலும்

தமிழர்களை திருப்திப்படுத்தும் போர்க்குற்ற விசாரணையே அவசியம் – ஐ.நா உயர் பிரதிநிதி

Jeffrey Feltman- pressஅனைத்துலகத் தரம்வாய்ந்த உள்நாட்டு விசாரணையை சிறிலங்கா அரசாங்க துரிதமாக நடத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“முன்னைய ஆட்சியாளர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் விரைவாக உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.

இந்த உள்நாட்டு விசாரணைகளை மிக விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த  ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கை, வரும் செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்றில் இருந்து, அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள செப்ரெம்பர் மாதம் வரையான காலப்பகுதியை இதற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் அனைத்துலக தரம் வாய்ந்ததாக அமைய வேண்டும்.

அனைத்துலக தரம் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவான  பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்று அடுத்த சில மாதங்களுக்குள்  உருவாக்கப்பட வேண்டும் என்ற ஐ.நாவினதும் அனைத்துலக சமூகத்தினதும் எதிர்பார்ப்புகள் குறித்து சிறிலங்கா சந்திப்பகளில் நான் வலியுறுத்தியுள்ளேன்.

இது ஒன்றும் இலகுவான விடயம் அல்ல. ஆனால் இது அவசியமான நடவடிக்கை என்று அனைத்துலக சமூகமும், உள்நாட்டு மக்களும் நம்புகின்றனர்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான எந்தவொரு உள்நாட்டு விசாரணையும்,சிறுபான்மைத் தமிழர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலானதாக இருக்க வேண்டும்.

போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த விசாரணை அளவிடும் வகையில் இந்த பொறிமுறை அமைய வேண்டும்.

நீண்டகாலமாக நீடித்த இனமுரண்பாடுகளால் எல்லா சமூகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

நான்கு நாள் சிறிலங்கா பயணத்தின் போது, யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தேன். அங்கு பெரும்தொகையான முறைப்பாடுகளை கேட்க முடிந்தது.

வெறும் வார்த்தைகள் தமது வாழ்க்கை நிலையை மாற்றாது என்ற பொதுவான சந்தேகம் யாழ்ப்பாணத்தில் உள்ளது.

ஆயிரக்கணக்கான தமது உறவுகள் காணாமற் போயுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது காணிகளை இராணுவம் பிடித்து வைத்துள்ளதாகவும், தமிழர்கள் குற்றம்சாட்டினர்.

இராணுவத்தின் நிலைகொள்ளல் பொதுமக்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடாது.

காணி, தடுப்புக்காவல், காணாமற்போதல், பொதுமக்கள் வாழும் பகுதியில் இராணுவப் பிரசன்னம் உள்ளிட்ட குறுகிய காலத்தில் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சிறிலங்கா அரசாங்கம் நடத்தவுள்ள புதிய போர்க்குற்ற விசாரணைக்கு முன்னதாக, மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில், தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகளையும், இராணுவத்தினர் வசம் உள்ள நிலங்களையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் நோக்கம் தொடர்பாக அவநம்பிக்கை கொண்டுள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், சில சலுகைகளை வழங்க வேண்டும்.

இலங்கையர்களுக்கு இடையில் உள்ள இந்த நம்பிக்கை இடைவெளி நிரவப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *