மேலும்

சீன மீன்பிடிக் கப்பல்களுக்கான அனுமதியை மீளப்பெற்றது சிறிலங்கா

Chinese fishing vesselசிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு எட்டு சீன நிறுவனங்களின் கப்பல்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.

சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாட்டை மீறி செயற்பட்டதற்காகவே, சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மீன்பிடி  அனுமதிகள் ரத்துச் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, சீன நிறுவனங்கள் தாம் பிடிக்கும் மீன்களின் அளவு, மீன்பிடிப்பதற்கு தாம் கையாளும் பொறிமுறைகள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, சட்டவிரோத மீன்பிடிகளைக் கட்டுப்படுத்த தவறியதற்காக, சிறிலங்காவின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை நீக்குவதற்காக- ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்பதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா கொடியுடன் சட்டவிரோத மீன்பிடிமுறைகளைப் பயன்படுத்தி அனைத்துலக கடற்பரப்பில் மீன்கள் பிடிக்கப்படுவதாக அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியிருந்தது.

அதேவேளை, சிறிலங்கா கொடியுடன் அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட சீன கப்பல்கள், விதிமுறைகளை மீறி சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், குறைந்தளவு மீன்களுடனோ, வெறும்கையுடனோ திரும்புவதாகவும் அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இதனால், சீன மீன்பிடிக் கப்பல்கள், ஆழ்கடலில், சட்டவிரோத தொழில்களில் ஈடுபடலாம் என்ற சந்தேகமும் எழுந்திருந்தது.

இந்தநிலையிலேயே, 45 மீற்றர் நீளம் கொண்ட- ஒரு தடவையில் 300 மெட்ரிக் தொன் மீன்களைப் பிடித்து வரக் கூடிய எட்டு சீன மீன்பிடிக்கப்பல்களுக்குமான அனுமதிகளை சிறிலங்கா அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *