மேலும்

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அனைத்துலக மன்னிப்புச் சபை

Amnestyசிறிலங்காவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அனைத்துலக மன்னிப்புச் சபை தனது ஆண்டறிக்கையில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச்சபையின் 2014ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில், மனித உரிமைகள் குறித்து ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 29 நாடுகள் உட்பட உலகின் 160 நாடுகளில் நிலவிய போக்குகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது.

அதில் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நீண்ட பட்டியலை அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் காரணமற்ற கைதுகள், சித்திரவதைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான நடவடிக்கைகள், காணாமற்போனோரின் உறவுகளை அச்சுறுத்துதல், மதச் சிறுபான்மையினர் மீதான அபாயகரமான தாக்குதல்கள் போன்றன இடம்பெற்று வருகின்றன.

ஆனால் அந்த சம்பவங்களோடு தொடர்புபட்ட அதிகாரக் குழுக்கள் மீது வலுவான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மோதலின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஐ.நா தலைமையிலான விசாரணை குழு நியமிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.

எனவே சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஐ.நா விசாரணைக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

புதிய அரசின் நடவடிக்கைகள் சில திருப்தியளிக்கின்றன. குறிப்பாக நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்டுதல், கருத்துச் சுதந்திரத்தை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன.

எனவே இந்தப் புதிய அரசு மனித உரிமைகள் விடயத்திலும் பொறுப்புக்கூறும் என்று மன்னிப்புச்சபை நம்புகிறது.

சிறிலங்காவில் நீண்டகாலமாக இடம்பெற்ற போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஒரே இரவில் சீர்செய்துவிட முடியாது. அதற்கான கால அவகாசம் தேவை.

பல பத்தாண்டுகளாக நீடித்த போர் காரணமாகவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் தேவை. பரஸ்பர கலந்துரையாடல்களும் முக்கியமானவை.

சிறிலங்காவில் பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்க, அதுகுறித்த கொள்கைளாக்கத்தில் சீர்திருத்தங்கள் தேவையாகவுள்ளன.

சமீபத்தில் கூட சந்தேகத்திற்கிடமாக தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் காவல்நிலையத்தில் மரணமானார் என்று ஓர் அறிக்கை கூறுகிறது.

காரணமே இன்றி கைது செய்யப்படுபவர்கள் வருடக்கணக்கில் சிறைகளில் அடைக்கப்படுவதால் அவர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க அமைப்பு ரீதியான மீள் கட்டுமானங்களும், வெளிப்படைத்தன்மையுமே முக்கியமானவை.

சிறந்த விவாதங்கள் மூலம் சிறிலங்காவில் இருக்கக் கூடிய பல பிரச்சினைகளுக்கத் தீர்வு காணமுடியும் என்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *