மேலும்

ஐ.நா விசாரணைக் குழுவுடன் கூட்டமைப்பு அவசர சந்திப்பு – அறிக்கையை பிற்போடக்கூடாது என்று கோரிக்கை

un-logoசிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை, திட்டமிட்டபடி அடுத்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா விசாரணைக் குழுவின் தலைவர் சன்ட்ரா பெய்டாசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான குழுவை, ஜெனிவாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

அடுத்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள விசாரணை அறிக்கை தொடர்பாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சந்திப்பில், திட்டமிட்டபடி அடுத்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா குழுவின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அறிக்கை சமர்ப்பிப்பதை பிற்போடக் கூடாது என்றும், ஐ.நா விசாரணைக் குழுவின் தலைவர் சன்ட்ரா பெய்டாசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,

“சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுப்பதற்காக விசாரணை அறிக்கையை தாமதிக்க மேற்கொள்ளப்படும் நகர்வுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிந்துள்ளது.

ஆனால், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு புலம்பெயர் தமிழர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடுமையாக பாடுபட்டிருக்கின்றது.

அமெரிக்காவும் கடுமையாக உழைத்து பல நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தது.

விசாரணைகளுக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகளை நாம் பெற்றிருக்கிறோம்.

எனவே தமிழ் மக்களுக்கு இந்த விசாரணை முக்கியமானது.

இந்த அறிக்கை தாமதமாக வருகிறது என்றால், இறுதியில் எதுவும் நடக்காது என்று தான் அர்த்தமாகும்.

எனவே, திட்டமிட்டபடி, விசாரணை அறிக்கை, வரும் மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்பட  வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *