மேலும்

மகிந்த ராஜபக்ச : தெற்கிலிருந்து தோற்றம் பெற்ற அளப்பரிய ஒரு அரசனின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா?

Presedent -MRவழமையை விட இரண்டு ஆண்டுகள் முன்னதாக அதிபர் தேர்தலை நடாத்தவுள்ளதாகவும் இதனை ஜனவரி 08 அன்று நடாத்தவுள்ளதாகவும் அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த போது இவர் தான் வெற்றி பெறுவேன் என்கின்ற நம்பிக்கையைக் கொண்டிருந்திருப்பார்.

அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்கள் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என்கின்ற சாத்தியத்தைக் குறைத்தது. ஆனால் எதிர்க்கட்சிக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டன.

சிறிலங்காவின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்தது. சிறிலங்காவின் தெற்கிலிருந்து தோற்றம் பெற்ற அளப்பரிய ஒரு அரசனாக மகிந்த ராஜபக்ச தன்னைச் சித்தரித்தார். இவர் இரண்டாம் தடவையாக சிறிலங்கா அதிபராகப் பதவியேற்கும் போது 57 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
தற்போது மூன்றாவது தடவையாகவும் இவர் சிறிலங்கா அதிபராகப் போட்டியிடவுள்ள நிலையில் ஜனவரி 08 தேர்தல் மிகவும் போட்டிமிக்கதாக இருக்கும் என எதிர்வுகூறப்படுகிறது.

2009ல் தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் நாட்டில் 26 ஆண்டுளாகத் தொடரப்பட்ட யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த யுத்தத்தை திரு.ராஜபக்ச முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களால் பாரபட்சப்படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்து தமிழ்ப் புலிகள் போரைத் தொடுத்தனர்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் குருதி சிந்தப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டதாகும். இந்த வெற்றி மிகக் கொடூரமானது. இந்த யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. புலிகளைப் போல சிறிலங்கா இராணுவத்தினரும் பல்வேறு யுத்த மீறல்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டனர்.
ஆனால் இதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. வெளிநாட்டு சக்திகள் தனது நாட்டில் தலையீடு செய்யக்கூடாது எனக்கூறுவதன் மூலம் தன்னை ஒரு தேசவிசுவாசியாகக் காண்பிப்பதற்கான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச மேற்கொள்கிறார்.

மக்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகள் மகிந்த ராஜபக்சவிற்கான ஆதரவு குறைவதற்கான காரணங்களில் ஒன்றாகும். இதை விட வேறு காரணங்களும் உள்ளன.

அதாவது சிறிலங்காவின் தற்போதைய அதிபர் முஸ்லீம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவாக இருந்துள்ளார். இவர் தனது நான்கு சகோதரர்கள், ஒரு மகன் மற்றும் மருமகன் ஆகியோருடன் இணைந்து அரசாங்கத்தை நடாத்தி வருகிறார். இவர்கள் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர்.

நாட்டில் ஊழல் மோசடிகள் மிகவும் மோசமாகியுள்ளன. திரு.ராஜபக்ச தனது அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றப் பலத்தைப் பயன்படுத்தி நீதிச்சேவையின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துள்ளார்.

அத்துடன் சிறிலங்காவில் இதுவரை காலமும் நடைமுறையிலுள்ள அதிபர் முறைமையை மாற்றி மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்கின்ற சட்டச் சீர்திருத்தத்தை ராஜபக்ச அமுலுக்குக் கொண்டுவந்தார். ஏற்கனவே நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிபர் முறைமையை இது மேலும் பலப்படுத்துவதுடன், அரசியல் யாப்பில் குறிப்பிட்டது போன்று தமிழ் மக்களுக்கான சுயாட்சி உரிமையை வழங்கக்கூடிய எந்தவொரு சட்ட வரைபையும் தோல்வியில் முடிவடையச் செய்வதே ராஜபக்சவின் முயற்சியாகும்.

சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்துக் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் அச்சத்தில் வாழ்கின்றனர். ராஜபக்ச அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், திரு.ராஜபக்ச சீனாவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணி வருகிறார்.

திரு.ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தால் மக்கள் மத்தியில் பெரிய கிளர்ச்சிகள் ஏற்படாது. ஏனெனில் பொருட்களின் விலையேற்றம், ஊழல் மோசடி, குடும்ப ஆட்சி போன்றவற்றால் மக்கள் ஏற்கனவே அரசாங்கம் மீது கோபமடைந்துள்ளனர்.

ராஜபக்சவின் எதிர்க்கட்சி வேட்பாளாரான மைத்திரிபால சிறிசேன, நவம்பர் மாதம் வரை ராஜபக்சவின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியதுடன் குடும்பக் கட்சியில் மிக முக்கிய பதவி வகித்தார். நாட்டில் தற்போது நிலவும் சர்வதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் எதிரணியினர் தமது அதிபர் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவுசெய்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் முஸ்லீம் கூட்டணிக் கட்சிகள் சில ஆளுங்கட்சியிலிருந்து விலகி எதிரணியுடன் இணைந்துள்ளன.

திரு.சிறிசேன தமிழ் மக்களைப் பொறுத்தளவில் வரவேற்கத்தக்க நம்பிக்கை மிக்க ஒருவராகக் காணப்படவில்லை. போரின் இறுதிக்கட்டத்தில் இவர் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்பட்டார்.

திரு.ராஜபக்சவுக்குப் பதிலாக மைத்திரிபால சிறிசேனவை அதிபராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நாட்டில் நிலவும் இனமுரண்பாடுகளைக் களைவதற்கான அவசியமான நகர்வாகக் காணப்படும். நாட்டில் நம்பகமான தேசிய மீளணக்கப்பாட்டிற்கான சாத்தியங்ளை எட்டுவதற்கும் நாட்டில் நிலையான ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமானது. திரு.சிறிசேன அதிபராகத் தெரிவு செய்யப்படுவதே மட்டுமே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான வழியாகக் காணப்படும். திரு.ராஜபக்ச எப்போதும் பெருமளவான மக்களை முட்டாளாக்க முடியாது என்பதே உண்மையாகும்.

வழிமூலம் : The Economist
மொழியாக்கம் : நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *