மேலும்

மைத்திரியைத் தோற்கடிக்க குமார் குணரத்தினத்துக்கு கதவைத் திறந்தது சிறிலங்கா

Kumar Gunaratnamசிறிலங்கா அரசாங்கத்தினால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட, குமார் குணரத்தினத்தை மீண்டும் கொழும்புக்குத் திரும்பி வருவதற்கு,  அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கச் செய்யும் தந்திரோபாயங்களில் ஒன்றாகவே,  குமார் குணரத்தினத்துக்கு சிறிலங்கா வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேவிபியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த குமார் குணரத்தினம், 1990களின் துவக்கத்தில்  நாட்டை விட்டுத் தப்பிச் சென்று அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடியிருந்தார்.

அவர், நொயல் முதலிகே என்ற பெயருடன் அவுஸ்ரேலியாவில் இருந்து 2011ம் ஆண்டு நாடு திரும்பி ஜேவிபியை உடைத்து, முன்னிலை சோசலிச கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.

இந்தநிலையில், 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெள்ளை வானில், சிறிலங்கா அரச புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட அவர், அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் அழுத்தங்களை அடுத்து, விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், போலியான பெயருடன் நாட்டுக்குள் பிரவேசித்தார் என்றும், நுழைவிசைவுக் காலத்தை மீறி தங்கியிருந்தார் என்றும். ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டார் என்றும் கூறி குமார் குணரத்தினத்தை, சிறிலங்கா அரசாங்கம் நாடு கடத்தியிருந்தது.

தற்போது, அவருக்கு சிறிலங்கா அரசாங்கம் கொழும்பு வருவதற்கு நுழைவிசைவு வழங்கியுள்ளது.

அவர் நேற்று கொழும்பு வருவதற்கான விமானப் பயணச்சீட்டை கொள்வனவு செய்துள்ளார். எப்போது அவர் கொழும்பு வருவார் என்று விரைவில் அறிவிக்கவுள்ளார்.

எனினும், முன்னிலை சோசலிசக் கட்சியின் அதிபர் வேட்பாளர் துமிந்த நாகமுவவை ஆதரித்து, கடவத்தையில் நடக்கவுள்ள இறுதி பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று அந்தக் கட்சியின் பரப்புரைச் செயலர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

இதன் போது, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜேவிபிக்கும் இடையில் உள்ள இரகசிய உடன்பாடு குறித்து அம்பலப்படுத்துவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

முன்னர் சிறிலங்கா வந்திருந்த போது நுழைவிசைவு விதிமுறையை மீறிய குற்றத்துக்காக, குணரத்தினம் சார்பில் 39, 130 ரூபா தண்டப்பணத்தை, காலி மாவட்ட நாடர்ளுமன்ற உறுப்பினர் அஜித் குமார கடந்த வாரம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் செலுத்தியிருந்தார்.

நுழைவிசைவு காலாவதியான பின்னரும், நாட்டில் தங்கியிருந்ததற்காக அவருக்கு இந்த தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

எனினும், கடந்த 16ம் நாள் இணையத்தளம் மூலம் நுழைவிசைவு கோரிய குமார் குணரத்தினத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே, குமார் குணரத்தினத்தின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் சிறிலங்கா வந்து இரகசியமான ஒரு இடத்தில் தங்கியுள்ளதாக, முன்னிலை சோசலிச கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சமீர கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.

குணரத்தினத்தின் மனைவி சம்பா சோமரத்தின அவுஸ்ரேலியாவில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

அவரும் மகனும், சிங்கப்பூர் வழியாக கடந்த 26ம் நாள் கொழும்பு வந்து, பிலியந்தலவில் உள்ள சம்பா சோமரத்தினவின் சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளனர்.

சுற்றுலா நழைவிசைவில் வரும் குமார் குணரத்தினம் அரசியல் மேடையில் பேச முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள போதிலும், அவர் இலங்கையில் பிறந்தவர் என்பதால், அவருக்கு அரசியலில் ஈடுபடும் பிறப்புரிமை உள்ளதாக, புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டநிபணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபரைத் தோற்கடிக்க வேண்டும் என்று ஜேவிபி கடுமையான பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜேவிபிக்கு நெருக்கடி கொடுக்கவும், ஜேவிபியின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைப்பதை தடுக்கவும், குமார் குணரத்தினத்தை ஒரு ஆயுதமாக சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்த முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *