மேலும்

தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் – இரா.சம்பந்தன்

sampanthan-rசிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன்  எழுத்துபூர்வ உடன்பாடு எதுவும் செய்து கொள்ளவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது குறித்து பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,

“மைத்திரிபால சிறிசேனவுடன் எழுத்துபூர்வமான உடன்பாடு ஏதும் செய்து கொள்ளவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நாங்கள் விவாதித்துள்ள விடயங்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், இனப்பிரச்சினை தீர்வு குறித்து அர்த்தபூர்வமாக முயற்சிகளை முன்னெடுக்கலாம் என்று நம்புகிறோம்.

நாட்டில் போர் முடிவடைந்த பின்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன.

அவருக்கு நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி, பிரச்சினைகளைத் தீர்க்க முயன்ற போதும், அவர் தனது கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவர் வீணடித்து விட்டார்.

மைத்திரிபாலவை ஆதரிக்கும் எதிரணியில் பௌத்த கடும்போக்கு கொள்கைகளை கொண்ட ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருக்கின்றன என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

அவர்களை முன்வைத்து, நாம் பொதுவேட்பாளரை ஆதரிக்க மறுக்க முடியாது.

மைத்திரிபால சிறிசேன மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயற்படக் கூடியவரல்ல என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இந்த விடயத்தில், எம்மால் மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கை வைக்க முடியாது.

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

எமது மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *