மேலும்

கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மையை இழந்தது மகிந்தவின் கூட்டணி

Najeeb Abdul Majeedமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

37 ஆசனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், 14 ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களைப் பெற்றிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து, கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைத்திருந்தது.

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு உறுப்பினரும், ஆளும்கட்சிக்கு ஆதரவளித்து வந்தார்.

இந்தநிலையில், அண்மைய அரசியல் மாற்றங்களை அடுத்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசும் ஆளும் கூட்டணியில் இருந்து விலகியுள்ளன.

இதனால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 7 மாகாணசபை உறுப்பினர்களினதும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் 3 உறுப்பினர்களினதும், ஆதரவை ஆளும் கூட்டணி இழந்துள்ளது.

மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து எதிரணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இந்தநிலையில், கிழக்கு மாகாணசபையில், முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையிலான அரசாங்கம், வீழ்ச்சி காணும் நிலையை அடைந்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல் முடியும் வரை, கிழக்கு மாகாணசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடிந்த பின்னர், மாகாணசபையில் எதிர்காலம் என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து நேற்று கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், “கிழக்கு மாகாணசபையில் இரு அமைச்சர்கள் பதவி விலகிய போதிலும், ஆட்சியைக் கவிழ்க்கமாட்டோம் என்றும், அங்கு ஆளும்கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை பேணுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கிழக்கு மாகாணசபை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படவில்லை” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *