மேலும்

தாய்வான் கண்காணிப்பாளர்களுக்கு சிறிலங்கா தடை

external-affairs-ministryசிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில், தாய்வான் நாட்டவர்களை ஈடுபடுத்துவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடை விதித்துள்ளது.

வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, தாய்வானில் இருந்து 15 கண்காணிப்பாளர்களை அழைக்க, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று அனுமதி கோரியிருந்தது.

தேர்தல் ஆணையாளர் மூலம் விடுக்கப்பட்ட இந்த அனுமதியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

தாய்வான் நாட்டு கண்காணிப்பாளர்களுக்கு, நுழைவிசைவு வழங்க முடியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறிவிட்டதால், தம்மால் அவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தமக்குத் தெரியப்படுத்தியிருப்பதாக, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பின்  தலைமை இணைப்பாளர் டி.எம்.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பினால், ஆசிய மற்றும் அமெரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த 68 அனைத்துலக கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்ததாகவும், தாய்வான் நாட்டவர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரே சீனா என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் என்றும் தெரிவித்துள்ள, டி.எம்.திசநாயக்க, இதையடுத்து, தமது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, தாய்வான் கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு. சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கிய பின்னரே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதில் தலையிட்டு, தடைவிதித்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *