மேலும்

போர்க்குற்றங்கள் குறித்துப் பேசும் உரிமை மகிந்தவுக்கு கிடையாது – சம்பிக்க ரணவக்க

champika-ranawakaபோர்க்குற்றங்கள் குறித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “போர்க்குற்றங்கள் குறித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது.

ஏனென்றால், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவின் அறிவிப்பையடுத்து, போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஏற்கனவே, மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நாம் எந்தவொரு அனைத்துலக விசாரணையையும் அனுமதிக்க மாட்டோம்.

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்தால், உள்நாட்டு விசாரணையை அனுமதிப்போம். இந்த விடயத்தில் நாம் மிகத் தெளிவாக இருக்கிறோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா படையினரை,  காட்டிக் கொடுத்து, தனித்து ஒதுக்கிவிட்டது மகிந்த ராஜபக்ச அரசாங்கம்.

இந்தநிலைக்கு, சிறிலங்கா அதிபர், வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரே பொறுப்பு.

2009ம் ஆண்டு எமக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

அப்போது எமக்கு 29 வாக்குகள் ஆதரவாகவும், 15 வாக்குகள் எதிராகவும் விழுந்தன. ஆனால், நாட்டையும், படையினரையும் சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில், இந்த நிலைமை மாறிவிட்டது.

மக்ஸ்வெல் பரணகம விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கு ஐந்து வெளிநாட்டு நிபுணர்களை நியமித்தது அரசாங்கம்.

இவர்கள் ஏன் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், இந்த குழுவினர் என்ன விசாரணைகளை நடத்தியுள்ளனர் என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் எந்தவொரு இராணுவ அதிகாரி அல்லது படையினருக்கும் எதிராக நடத்தப்படும் விசாரணையில் அவர் குற்றவாளியாக காணப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயார் என்பதே மைத்திரிபால சிறிசேனவின் கொள்கையாகும்.

கடந்த காலங்களில் 1971ம் ஆண்டு பிறேமாவதி மன்னம்பேரி கொலை விடயத்திலும், 1987இல் சூரியகந்த படுகொலை விவகாரத்திலும் இந்த நடவடிக்கை தான் மேற்கொள்ளப்பட்டது.

எதிரணியினர் ஆட்சிக்கு வந்தால், வடக்கில் இருந்து படையினர் விலக்கிக் கொள்ளப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கிறது.

எதிரணியினர் ஒருபோதும் படையினருக்குத் துரோகம் செய்யமாட்டார்கள்.

வடக்கில் உள்ள மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது.

வடக்கிலுள்ள மக்கள் வாக்குகளை அளித்த தமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *