மேலும்

ஆ ழிப்பேரலையின் பின்னான கடந்த பத்தாண்டில் சிறிலங்காவில் தனது அதிக நிதியை முதலீடு செய்து மேற்குலகின் இடத்தை சீனா தன்வசமாக்கியுள்ளது

Harbour at the town of Hambantotaமற்றையவர்களைப் பொறுத்தளவில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது எரிச்சலை உண்டுபண்ணுகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்திக்கு சீனா தனது நிதியுதவியை வழங்குவதன் மூலம் தனது போர்க் கப்பல்களை சிறிலங்கா தனது துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு சீனா அழுத்தம் கொடுக்கலாம் என சிலர் கவலை கொள்கின்றனர்.

இவ்வாறு அமெரிக்க ஊடகமான WALL STREET JOURNALல்  PATRICK BARTATHE எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் வெய்தவர் நித்தியபாரதி.

பத்தாண்டின் பின்னர் சிறிலங்காவில் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியில் துறைமுகம் ஒன்று அமைக்கப்படுவதுடன், 209 மில்லியன் டொலர் செலவில் விமானநிலையம் ஒன்று புதிதாகத் திறக்கப்பட்டுள்ளதுடன், 25,000 பேரை உள்ளடக்கக் கூடிய மாநாட்டு மண்டபம் மற்றும் துடுப்பாட்ட அரங்கம் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் பத்து மாடி வைத்தியசாலை ஒன்றும் நிர்மாணிக்கப்படுகிறது. சிறிலங்காவில் 35,000 வரையான பொதுமக்கள் காவுகொள்ளப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தால் ஏற்பட்ட பெரும்பாலான அழிவுகளை சீர்செய்வதற்கு சீனா உதவியுள்ளது.

எடுத்துக்காட்டாக, அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் 85 சதவீத நிதியை சீன ஏற்றுமதி – இறக்குமதி வங்கி வழங்கியுள்ளது. இதன் மேலதிக விரிவாக்கத்திற்கு சீனக் கம்பனிகள் இணைந்து நிதிவழங்கவுள்ளன. அம்பாந்தோட்டை விமான நிலையத்திற்கு சீனா அதிக நிதி வழங்கியுள்ளது. இதேபோன்று கொழும்புத் துறைமுக விரிவாக்கம், புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் தொடருந்துப் பாதைகள் புனரமைப்புத் திட்டத்திற்கு சீனா 500 மில்லியன் டொலர்கள் வழங்கியுள்ளது. இதேபோன்று கொழும்பிற்கு அருகில் நிலச்சமப்படுத்தலுக்கு 1.4 பில்லியன் டொலர்களும் சக்தி ஆலைத் திட்டத்திற்கு 1.3பில்லியன் டொலர்களும் சீனா வழங்கியுள்ளது.

கடந்த பத்தாண்டில் சிறிலங்காவில் சீனா தனது அதிக நிதியை முதலீடு செய்ததானது மேற்குலக ஆதரவுடன் இயங்கும் நிதி நிறுவனங்கள் சிறிலங்காவில் தக்கவைத்துக் கொண்டுள்ள இடத்தை சீனா எவ்வாறு கையகப்படுத்தியுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது.

ஆசிய கட்டுமான முதலீட்டு வங்கிக்கு சீனா 50 பில்லியன் டொலர்களையும் சீனாவின் ‘புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு’ 40 பில்லியன் டொலர்களையும் சீனா வழங்குவதாக அண்மையில் சீன அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார். பல பத்தாண்டுகால யுத்தத்தின் அழிவின் பின்னர் சிறிலங்கா மீளவும் உயிர்பெறுவதற்கு அதிக நிதி தேவைப்படுவதாக பெரும்பாலான சிறிலங்கர்கள் கருதுகிறார்கள்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதாரமானது ஆறு சதவீதத்தை விட அதிகரித்துள்ள போதிலும், மேற்குலக நிதி வழங்குனர்களிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமானதாக உள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். குறைந்த வட்டி வீதத்தில் சீனாவின் கடன்கள் சில வழங்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

“சீனா மிகக் குறுகிய காலத்தில் தனது திட்டங்களை சிறிலங்காவில் மேற்கொண்டுள்ளது” என John Keells Holdings என்கின்ற சுற்றுலாத்துறை மற்றும் சேவைகள் நிறுவனத்தின் பிரதித் தலைவர் அஜித் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பிரதான விமான நிலையத்திலிருந்து கொழும்பின் மத்திய பகுதி வரையான தொடரூந்துப் பாதையை சீனா அமைத்துள்ளதால் தற்போது முன்னரை விட அரை மணி நேரத்தில் இப்பயணத்தை நிறைவுசெய்ய முடியும் என அஜித் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இப்பாதை அபிவிருத்தித் திட்டமானது 1969ல் ஆரம்பிக்கப்பட்டதெனவும் ஆனால் சிறிலங்காவை ஆழிப்பேரலை தாக்கிய பின்னரேயே சீனாவின் நிதியுதவியுடன் மிகத் துரிதமாக நிறைவேற்றப்பட்டதாகவும் அஜித் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.

மற்றையவர்களைப் பொறுத்தளவில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது எரிச்சலை உண்டுபண்ணுகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்திக்கு சீனா தனது நிதியுதவியை வழங்குவதன் மூலம் தனது போர்க் கப்பல்களை சிறிலங்கா தனது துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு சீனா அழுத்தம் கொடுக்கலாம் என சிலர் கவலை கொள்கின்றனர். சீனா சிறிலங்காவுக்கு வழங்குகின்ற கடன்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை எனவும் சிறிலங்கா இக்கடனை மீளவும் வழங்காவிட்டால் என்ன நடக்கும் எனவும் சிலர் கேள்வியெழுப்புகின்றனர். அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் தனக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மட்டும் சிறிலங்கா அதிபர் சில திட்டங்களை நிறைவேற்றுவதாகவும் சிலர் ஆதங்கங்கொள்கின்றனர்.

“நாங்கள் தற்போது ஆடும் ஆட்டம் மிகவும் அபாயகரமானது. நாளின் இறுதியில் நீங்கள் உங்களது முழுப் பலத்தையும் காண்பிக்க வேண்டும்” என சிறிலங்காவின் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஹர்சா டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். சீனாவின் சிறிலங்காவுக்கான ஆதரவை இந்தியா தனக்கான எச்சரிக்கையாக நோக்குகிறது. அதாவது சிறிலங்காவில் சீனா தனது செல்வாக்கை அதிகரிப்பதானது தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது எனவும் குறிப்பாக இவ்வாண்டு சீன நீர்மூழ்கிக்கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றதன் பின்னர் இந்த அச்சுறுத்தல் மேலும் அதிகரித்துள்ளதாக இந்தியா கருதுகிறது.

“இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்றால், இந்திய மாக்கடலானது சீனக் கடற்படையினருக்குப் பரிச்சயமான ஒரு கடற்பரப்பாகக் காணப்படும் எனவும் இது சீனக் கடற்படையினர் இந்தியத் தீபகற்பத்தை மிகவும் நெருங்குவதற்கு வழிவகுக்கும்” எனவும் ஓய்வுபெற்ற இந்தியக் கடற்படைத் தளபதியும் புதுடில்லியைத் தளமாகக் கொண்டியங்கும் கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் இயக்குனருமான C.U.உதேய் பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கான தமது ஆதரவானது இரு தரப்பு வர்த்தக நல்லுறவைக் கட்டியெழுப்புவதை மட்டுமே நோக்காகக் கொண்டதாகவும் இராணுவ சார் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை எனவும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீன அரசின் தலைவர் என்ற வகையில் 28 ஆண்டுகளில் முதன் முதலாக சீனாவின் தற்போதைய அதிபர் செப்ரெம்பரில் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டதுடன், சீனத் துறைமுக பொறியியல் நிறுவனத்தினால் கட்டப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தையும் பார்வையிட்டார்.

சிறிலங்காவில் சீனா இன்னமும் முதலீடுகளை மேற்கொள்ளும் எனவும் இதில் இராணுவ நோக்கங்களும் உள்ளடங்கும் எனவும் சிறிலங்காவில் பரந்த மூலோபாய நலனை அடைந்து கொள்வதற்கான முதலீடுகளை சீனா மேற்கொள்ளும் எனவும் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டேவிட் பிரேவ்ஸ்ரர் குறிப்பிட்டுள்ளார். தற்போது சீனாவின் நிதியுதவியுடன் சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் கட்டப்பட்டுள்ள புதிய அனைத்துலக விமான நிலையத்தில் நாளொன்றுக்கு அரை டசின் விமானங்கள் மட்டுமே தரையிறங்குகிறது.

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது 1500 வரையான மக்கள் காவுகொள்ளப்பட்ட, 25,000 மக்களைக் கொண்ட அம்பாந்தோட்டையை சீனாவின் நிதி மாற்றிவருகிறது என்பது நிச்சயமாகும். உள்ளுர் அரசியல்வாதியாக இருந்த திரு.ராஜபக்ச 2005ல் சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்ற பின்னரும், உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் நிதி அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது. சீனாவின் அபிவிருத்தித் திட்டங்களுடன் அம்பாந்தோட்டையில் மாநாட்டு மண்டபத்தை அமைப்பதற்கு தென்கொரியா நிதி வழங்கியது. ஐரோப்பிய நிதிவழங்குனர்களும் உதவினர்.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட பல புதிய பாரிய திட்டங்கள் தற்போது முறைகேடாகப் படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட புதிய விமான நிலையத்திற்குச் செல்லும் வீதியில் தெரு நாய்கள் உலாவுகின்றன. ஆனால் இந்த விமான நிலையமானது அம்பாந்தோட்டையை ஒரு சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது.

கொங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் சங்றி-லா விடுதிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் 300 அறைகளுடன் அமைக்கத் திட்டமிடப்படுகின்றன. 2011ல் திறக்கப்பட்ட துடுப்பாட்ட அரங்கில் அந்த ஆண்டிற்கான உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் சில போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

அம்பாந்தோட்டையில் துறைமுக வளாகம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுகப் பணிகள் முற்றிலும் நிறைவடையும் போது இது ஆசியாவிலுள்ள மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகக் காணப்படும். இங்கு ஒரு மாதத்தில் 45-50 கப்பல்கள் தங்கிநிற்கின்றன.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகில் தொழில் வயலம் ஒன்றை அமைத்து அதன் மூலம் உள்ளுர் தொழில் வாய்ப்பில் சீனா நலனை அடைவதற்கான முயற்சிகள் சீனாவால் மேற்கொள்ளப்படலாம்.

தனது கடனை அடைப்பதற்குத் தேவையான வருவாயை அம்பாந்தோட்டைத் துறைமுகம் பெறவில்லை. இந்த வேறுபாடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பாகும். இது ஒரு பிரச்சினையில்லை எனவும், இங்கு புதிய வேலைகள் மற்றும் குறிப்பிடத்தக்க நலன்கள், பாரிய இலாபங்களைப் பெறக் கூடிய புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படலாம் என உள்ளுர் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *