மேலும்

‘பாப்பரசர் எம்முடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் – முள்ளிவாய்க்கால் மக்களின் வேண்டுதல்

popeபாப்பரசர் எமது இடத்துக்கு வந்து, எம்முடன் இணைந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்றும், வடக்கிலுள்ள தமிழர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர், பாப்பரசரின் 78வது பிறந்த நாளன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர்கள் இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் அதிபர தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜனவரி 13ம் நாள் தொடக்கம், 15ம் நாள் வரை பாப்பரசர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், பாப்பரசர் வருகை தருவது குறித்து, கிறிஸ்தவ அமைப்புகளின் ஒரு பகுதியினர் கவலை கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், வடக்கிலுள்ள தமிழ் கத்தோலிக்கர்கள் சிறிலங்காவில் நிலையான அமைதிக்காக பிரார்த்தனை செய்வதற்கு பாப்பரசர் நீண்ட, ஆரோக்கியமான ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

“வாக்களிப்பு மிக முக்கியமானது. பாப்பரசரின் வருகையின் போது நாம் எந்தப் பதற்றமான நிலை ஏற்படுவதையோ வன்முறைகள் இடம்பெறுவதையோ விரும்பவில்லை.” என்று தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

“வடக்கில் இன்னமும் அமைதியோ, சுதந்திரமோ இல்லை” என்று முள்ளிவாய்க்காலில் உள்ள தமிழ்க் குடும்பங்கள் சில தெரிவித்தன.

இதனால், “பாப்பரசர் எமது பகுதிக்கு வந்து எம்முடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்” என்றும் அவர்கள் கூறினர்.

“பாப்பரசர் எம்முடன் இணைந்து பிரார்த்தனையில் பங்கேற்பது எமக்குப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கும்” என்று அவரது நலன் விரும்பிகள் தெரிவித்தனர்.

“பாப்பரசர் நீண்டகாலம் வாழ வேண்டும். அவர் அமைதியான சூழலில், எமது மண்ணுக்கு வரவேண்டும்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாப்பரசர் தனது சிறிலங்கா பயணத்தின் போது, மடுத்திருத்தலத்தில், திருப்பலி ஆராதனையை நடத்தவுள்ளதுடன், போரில் தப்பிய சிலரையும் சந்திக்கவுள்ளார் என்றும் ஏசியா நியூஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *