மேலும்

சிறிலங்கா அமைச்சர் குத்துக்கரணம் – அமெரிக்க தூதுவர் சலுகைகளை வழங்க முன்வரவில்லையாம்

Gunaratne-Weerakoonஅரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதற்கு, அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயற்சிக்கவில்லை என்று, குத்துக்கரணம் அடித்துள்ளார், சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன்.

அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் சிசன், அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதற்காக, தனக்கு அமெரிக்காவில் வீடு, கிறீன்கார்ட் வதிவிட உரிமை, உள்ளிட்ட சலுகைகளைத் தர முயன்றார் என்று, அண்மையில் அரசியல் கூட்டம் ஒன்றில் உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் சிறிலங்கா அமைச்சர் குணரத்ன வீரக்கோன்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்த தகவல்கள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியான நிலையில், அவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம், தாம் அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“ஊடகத் தகவல்கள் பொய்யானவை.  எனக்கு அவ்வாறு எந்த சலுகைகளும் அளிக்க முன்வரவில்லை.

இதுதொடர்பான எனது விளக்கத்தை ஏற்கனவே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு அனுப்பியுள்ளேன்.

2012ம் ஆண்டு எனது அமைச்சில், அமெரிக்கத் தூதுவருடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அப்போது அவர் மீள்குடியேற்றப் பணிகளுக்கு அமெரிக்கா உதவும் என்று வாக்குறுதி அளித்தார்.

அந்தக் கலந்துரையாடலின் போது, உயர்பாதுகாப்பு வலயங்களில் இருந்து படையினரை வெளியேற்றுவது அகற்றுவது சாத்தியமா என்று அமெரிக்கத் தூதுவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில், எனக்கு உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து படையினரை அகற்றும் அதிகாரங்கள் இல்லை என்று அமெரிக்கத் தூதுவருக்குப் பதிலளித்தேன்.

இதுதொடர்பாக ஆயுதப்படைகளின் தளபதி என்ற வகையில், சிறிலங்கா அதிபரும், பாதுகாப்புச்செயலரும் தான் நடவடிக்கைகளை எடுக்க மடியும் என்வும் அவரிடம் கூறினேன்.

அண்மையில் அரசியல் மேடை ஒன்றில் நான் உரையாற்றிய போது இது குறித்து குறிப்பிட்டவற்றில் தேவையான பகுதிகள் நீக்கப்பட்டு, ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

அதனால், எனது உரை தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *