மேலும்

“தோல்வியுற்றால் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன்” – ஆயர்களுக்கு மகிந்த வாக்குறுதி

mahinda-malcom-ranjitஅதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால், எந்த தயக்கமும் இன்றி அதிகாரத்தை ஒப்படைத்து விடுவேன் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கத்தோலிக்கத் திருச்சபைக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடந்து ஐந்து நாட்களுக்குப் பின்னர், பாப்பரசர் பிரான்சிசின் பயணம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஆயர்கள் மாநாட்டில் இதுகுறித்து கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும், வன்முறைகளற்ற தேர்தல் இடம்பெறும் என்று தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு மறை மாவட்ட ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள நிலையில், ஐந்து நாட்கள் கழித்து ஜனவரி 13ம் நாள் பாப்பரசர் மூன்று நாள் பயணமாக சிறிலங்கா செல்லத் திட்டமிட்டுள்ளார்.

தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதால், பாப்பரசரின் இந்தப் பயணம் பிற்போடப்பட வேண்டும் என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் ஒரு பகுதியினர் கோரி வருகின்றனர்.

ஆனால், இரண்டு பிரதான வேட்பாளர்களும், வன்முறைகளுக்கு இடமளிக்கப்படாது என்று தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக ஆயர்கள் மாநாட்டில் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார் என்று கத்தோலிக்க வாரஇதழான மெசஞ்சர், தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் இருவரும் கூறிய வாக்குறுதியின் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“ஆயர்களால் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சரி, யார் தோல்வியுற்றாலும் சரி, இருவரும், பாப்பரசரை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டும் என்று அவர்கள் வேட்பாளர்கள் இருவரிடமும் கேட்டுள்ளனர்.

தேர்தலில் தோல்வியுற்றால் என்ன நடக்கும் என்று சிறிலங்கா அதிபரிடம் ஆயர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், எந்தவித தயக்கமும் இன்றி, வெற்றிபெற்றவரிடம் பதவியை ஒப்படைப்பேன் என்று பதிலளித்தார்“ என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *