மேலும்

மகிந்த, மைத்திரி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம்

suresh-premachandranசிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி கொள்ளவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையில்,

“வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்மக்களின் எரியும் பிரச்சினைகள் குறித்து இரண்டு பிரதான வேட்பாளர்களுமே எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை.

எனவே, இரு வேட்பாளர்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சியடையவில்லை.

ஆளும்கட்சி தாம் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளில் தங்கியிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

எதிரணியின் பொதுவேட்பாளர் தமிழ்மக்களுக்கு சில எதிர்மறையான சமிக்ஞைகளை அனுப்பியிருக்கிறார்.

தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை.இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் எந்த திட்டமும் இல்லை.

எதிரணியின் பொதுவேட்பாளர் தமக்குப் பின்னால் இருக்கும் சிங்கள அடிப்படைவாத சக்திகளின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

அரசியல் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, நாளாந்தப் பிரச்சினைகளுக்குக் கூட, தீர்வு அளிக்கப்படவில்லை.

எதிரணியின் பொதுவேட்பாளர், கூட்டாட்சி அரசமைப்பு முறைக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு  விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தது போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குத் தூண்டுமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுரேஸ் பிறேமச்சந்திரன்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலைப் புறக்கணிக்கும் என்று நான் கூறவில்லை.

ஆனால், இரண்டு வேட்பாளர்கள் குறித்தும் கூட்டமைப்பு மகிழ்ச்சியடையவில்லை.

தமிழர்களுக்கு எதையும் வழங்கத் தவறியுள்ள நிலையில், எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்குமாறு நாம் எவ்வாறு தமிழ்மக்களைக் கோர முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *