மேலும்

இன்று திருப்பதி செல்கிறார் மகிந்த – பாதுகாப்பு கெடுபிடிகளால் தமிழர்கள் திணறல்

mahinda-Tirupatiசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இன்று மாலை திருப்பதிக்குச் செல்லவுள்ள நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இன்று மாலை திருப்பதிக்குச் செல்லவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குழுவினரை ஏற்றிய விமானம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் ரேனிகுண்டா விமான நிலையத்தை வந்தடையும் என்றும், அங்கிருந்து அவர்கள் தரைவழியாக திருப்பதி செல்வர் என்றும், மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இன்று மாலையிலும், நாளை அதிகாலையிலும் அங்கு வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், நாளை காலை 8.15 மணியளவில் சிறிலங்கா அதிபர் திருமலையில் இருந்து புறப்பட்டு, தரைவழியாக காலை 9.30 மணியளவில் ரேனிகுண்டா விமான நிலையத்தைச் சென்றடைவார்.

அங்கிருந்து, விமானம் மூலம் கொழும்பு திரும்புவார் என்றும் மாவட்ட ஆட்சியர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரேனிகுண்டா விமான நிலையத்தில், இருந்து திருப்பதி சென்று அங்கிருந்து திரும்பி வரும் வரை மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து, ஆந்திர மாநில காவல்துறையினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து திருப்பதி வரை பரீட்சார்த்த வாகனத் தொடரணியும் நடத்தப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம், திருப்பதி சென்ற சிறிலங்கா அதிபருக்கு, தமிழ்நாட்டு எல்லை வழியாக நுழைந்த தமிழர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், இம்முறை ஆந்திர காவல்துறை இரட்டிப்பு கவனம் செலுத்துகிறது.

தமிழ்நாட்டில் இருந்து தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த எவரும் சித்தூர் மாவட்டத்துக்குள் நுழைவதை தடுப்பதற்காக,  குப்பம்- கிருஸ்ணகிரி எல்லைச் சோதனைச்சாவடிகளில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நடமாடும் ரோந்து வாகனங்கள் மூலம், வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன.

புத்தூர், நகரி, சத்தியவேடு ஆகிய இடங்களில் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *