மேலும்

அதிபர் செயலக அறிக்கையை மறுக்கிறது ரிசாத் பதியுதீன் கட்சி – இன்னமும் முடிவு செய்யவில்லையாம்

rishad bathiudeenரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக, அதிபர் செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது என்றும், தாம் இதுபற்றி இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் வை.எல்.எஸ்.ஹமீத் தெரிவித்தார்.

‘ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் எமது கட்சி பேச்சு நடத்தியுள்ளது, சில கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

என்றாலும், ஆதரவு எனும் முடிவு எடுக்கப்படவில்லை. அதிபர் செயலகத்தால் வெளியிட்ட தகவல் சரியானது அல்ல.

முஸ்லிம் மக்களின் நலன்கள் குறித்து மேலும் சில விடயங்கள் குறித்து விவாதிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டுக் குழு கூடி ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.

இருதரப்புக் குழுக்களும் தனித்தனியாகவும், கூட்டாகவும் விவாதித்த பிறகு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்நிலைக் கூட்டம் எதிர்வரும் 12ம் நாள் கூடும் என்றும் அதன் பின்னரே தமது நிலைப்பாடு வெளியிடப்படும்.

இந்தச்சூழலில் தமது பேச்சுகளை மட்டுமே வைத்து, தமது கட்சி சிறிலங்கா அதிபருக்கு ஆதரவளிப்பதாக அவரது செயலகம் தெரிவித்துள்ளது சரியானது அல்ல.

சிறுபான்மை மக்கள் தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பு, முஸ்லிம் மக்களின் வாழ்வாதார உத்தரவாதம், மதக்கடமைகளை பயமின்றி சுதந்திரமாக முன்னெடுப்பது ஆகியவை அதிபர் ராஜபக்சவுடனான பேச்சுக்களில் இடம்பெற்றன.

.எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதிப்படும் விடயங்கள் தமது தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

அவ்வாறு அவர் கூறுவதை உறுதி செய்ய வேண்டிய தேவையும் எமது கட்சிக்கு உள்ளது.

சிறிலங்காவின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் பத்து சதவீதம் இருந்தாலும், அரச வேலைகளில் நான்கு சதவீதம் கூட அவர்கள் இல்லை என்பதை தமது தரப்பு சிறிலங்கா அதிபரிடம் எடுத்துக் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *