மேலும்

சிறிலங்காவில் சீனாவின் உறவைப் பலப்படுத்தும் ‘நீர் வழங்கல் திட்டம்’

Chinese President Xi Jinping - Sri Lanka President  Mahindaசீனா தனது ‘மென்மையான அதிகாரத்தைப்’ பயன்படுத்தி கொழும்புடன் தனது உறவை மேலும் ஆழமாக்குவதற்காக தற்போது சிறிலங்காவில் மிகப் பெரிய நீர் வழங்கல் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருபோதும் மேற்கொள்ளப்படாத மிகப் பாரிய நீர்வழங்கல் திட்டத்தை சீனாவின் இயந்திர பொறியியல் கூட்டுத்தாபனம் [China Machinery Engineering Corporation – CMEC]  230 மில்லியன் டொலர்கள் செலவில் ஆரம்பித்துள்ளது.

இச்சீன நிறுவனமானது ஏற்கனவே 1.2 பில்லியன் டொலர்கள் செலவில் சிறிலங்காவில் லக்விஜய நிலக்கரி ஆலை [Lakvijaya coal fired power plant] ஒன்றை நிறுவியிருந்தது. தற்போது சீன நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவுள்ள நீர் வழங்கல் திட்டம் நிறைவடையும் போது கொழும்பிற்கு அருகிலுள்ள 42 கிராமங்களைச் சேர்ந்த 600,000 வரையான மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

நாளொன்றுக்கு 54,000 கனசதுர மீற்றர் நிலப்பரப்புக்கு நீரை வழங்குவதற்கான பணியைப் பூர்த்தி செய்வதன் மூலம் இப்புதிய நீர்வழங்கல் திட்டத்தை மூன்று ஆண்டுகாலத்திற்குள் முழுமைப்படுத்துவதே சீன நிறுவனத்தின் நோக்கமாகும். இதற்குள் 1000 கிலோமீற்றர் வரையான பிரதேசத்திற்கு நீரை எடுத்துச் செல்வதற்கான குழாய்களைப் பொருத்துவதும் உள்ளடங்குகிறது.

சீனாவால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள இப்புதிய திட்டமானது இவ்விரு நாடுகளும் தமது உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான நகர்வாகும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீனாவின் பியூஜியன் மாகாணத்தை ஐரோப்பாவுடன் இணைப்பதற்கான கரையோர பட்டுப்பாதையை அமைப்பதற்கான மிக முக்கிய நாடாக சிறிலங்கா உள்ளது. சீனாவின் பட்டுப் பாதைத் திட்டமானது இந்திய மாக்கடலின் ஊடாக சிறிலங்கா, இந்தியா, மாலைதீவு, நைரபி, கென்யா போன்ற நாடுகளிலும் அமுல்படுத்தப்படும். இது இறுதியாக சுயஸ் கால்வாய் ஊடாக மத்தியதரைக்கடல் [Mediterranean] வரை பூரணப்படுத்தப்பட்ட பின்னர் வெனிசில் நிறைவுபெறும்.

சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா சிறப்பான உறவைப் பின்பற்றும் இதேவேளையில், இவ்விரு நாடுகளுடனும் சீனா மிகவும் நெருக்கமான உறவைப் பேணுவதை இந்தியா மிகவும் கவனமாக ஆராய்ந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா தனது ஐந்து விமான நிலையங்களைத் தற்போது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் விரிவுபடுத்தியுள்ளது. இதேபோன்று மாலைதீவுத் துறைமுகத்தில் இந்தியாவின் கடற்படைக் கப்பலான INS சுகன்யா தரித்து நிற்கிறது. இதேவேளையில் சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்கிறது. இதற்காக 600 மில்லியன் டொலர்கள் சீனாவின் எக்சிம் வங்கியாலும் ஒரு பில்லியன் யுவான்கள் சீன அரசாங்கத்தாலும் சிறிலங்காவுக்கு கடனாக வழங்கப்படவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக விரிவாக்கல் திட்டத்தின் முதலாவது கட்டத்திற்கு சீனா நிதியுதவி வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

செய்தி வழிமூலம் : The Hindu
மொழியாக்கம் : நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *