மேலும்

‘உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது மகிழ்ச்சி ஆனால் சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை’

yarlppanamயார் ஆட்சிக்கு வந்தாலும் தமது பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படாது என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது தமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போதிலும், தமக்கான சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இவ்வாறு ‘சண்டே லீடர்’ ஆங்கில ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேற்;கொள்ளப்படுவதுடன், கொழும்பில் பிரதான வேட்பாளர்களுக்கான பரப்புரைகள் இடம்பெறும் அதேவேளையில இந்த நிலையானது யாழ்ப்பாணத்தில் முற்றிலும் வேறுபட்டுள்ளது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படாது என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது தமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போதிலும், தமக்கான சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

வடக்கில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்ற போதிலும், தமிழ் மக்களின் வாழ்வாதாரமானது இன்னமும் மந்தநிலையிலேயே உள்ளதாகவும் இது சில இடங்களில் மிகவும் மோசமாக உள்ளதாகவும் மக்கள் முறையிடுகின்றனர். சிறிலங்காவின் வடக்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளன. சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்குவதன் மூலம் எந்தவொரு குற்றவாளியும் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என குற்றம் சாட்டப்படுகிறது.

வடக்கில் குற்றச்செயல்கள் மேலும் அதிகரிக்கிறன. பிணையில் விடுவிக்கப்படும் குற்றவாளிகள் மிகவும் சுதந்திரமாக நடமாடுவதாகவும் இதனால் குற்றவாளிகள் மேலும் மேலும் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எதுஎவ்வாறிருப்பினும், தடுப்பு நிலையங்களில் வசதிக் குறைபாடுகள் காணப்படுவதால் குற்றவாளிகளை பிணையில் விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவற்துறையினர் கூறுகின்றனர்.

இதேவேளையில், சிறிலங்காவின் வடக்கில் உள்ள பல வளாகங்கள் மற்றும் பெருமளவான இடங்கள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளபோதிலும், இவற்றில் தடுப்பு முகாங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் எதையும் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பெரும்பாலான நீதிமன்ற வழக்குகள் குறிப்பாக, பாலியல் வன்புனர்வு வழக்குகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாது நிலுவையிலுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புக்களைச் சந்திப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ்மக்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்ப்பதில் ஆர்வங்காட்டுவதுடன், அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்கிறதே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் எவ்வித அர்ப்பணிப்பையும் காண்பிக்கவில்லை என மக்கள் கருதுகின்றனர்.

காங்சேன்துறை தொடக்கம் மயிலிட்டி வரையான பிரதேசங்களிலிருந்து 1991-92 காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை என யாழ்ப்பாணத்தில் செயற்படும் முதன்மையான கத்தோலிக்க மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா இராணுவமானது துறைமுகம் மற்றும் விமானநிலையத்தை விரிவுபடுத்த வேண்டிய தேவையிலுள்ளது என்பதை நான் விளங்கிக்கொள்கிறேன். ஆனால் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு இவர்களுக்குத் தேவையா? ஏன் சிறிலங்கா இராணுவத்தினர் மக்கள் மத்தியில் தமது இருப்பிடங்களை அமைக்க முடியாது? சிறிலங்கா இராணுவப் புலனாய்வு வலைப்பின்னலானது நாட்டில் செயற்பட்ட பயங்கரவாதத்தை வெற்றிகொள்வதற்காகத் திறம்படச் செயற்பட்டுள்ளனர். எனினும் மக்களின் வாழ்விடங்களைக் கையகப்படுத்தி மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் மக்களின் மனங்களை ஒருபோதும் வென்றுவிட முடியாது. வடக்கில் மதுப்பாவனை அதிகரித்து விட்டது. இதேபோன்று குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. நாட்டின் நிர்வாகம் தொடர்பில் மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர். சிறிலங்கா அரசாங்கமோ, இராணுவமோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தமக்கு உதவவில்லை என மக்கள் கருதுகின்றனர்’ என கத்தோலிக்க மதகுரு ‘சண்டே லீடர்’ ஊடகத்திடம் மேலும் சுட்டிக்காட்டினார்.

சிறிலங்கா அரசாங்கம் தொடர்பாகவும் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் தற்போது நிலைமை எவ்வாறு உள்ளது என்பதையும் ‘சண்டே லீடர்’ ஊடகமானது மக்களிடம் வினவியுள்ளது. மக்கள் தமது கருத்துக்களைப் பின்வருமாறு பகிர்ந்து கொண்டுள்ளனர்:

றமேஸ் தோமஸ்:

“தமிழ் மக்கள் மிகவும் உயர்வான ஒரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்தனர். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்கள் முன்னுள்ள ஒரேயொரு தெரிவாகும் என்பதாலேயே இதற்கு மக்கள் ஆதரவளிக்கின்றனர். நாங்கள் டக்ளசுக்கு எமது ஆதரவை வழங்க விரும்புகிறோம். ஆனால் ஏனெனில் அவர் அரசாங்கத்திலுள்ளார். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நிச்சயமாக ஒரு மாற்றம் வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். சிறிலங்கா அரசாங்கமானது வீதிகளை அபிவிருத்தி செய்துள்ள போதிலும் இதன்மூலம் மக்கள் எதனையும் அடையவில்லை”

“போரின் போது தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். வீதிகள் மற்றும் தொடருந்துப் பாதைகளைப் புனரமைப்பது மட்டும் போதியதல்ல. நாங்கள் எமது சொந்த நிலத்தை நாமே ஆள விரும்புகிறோம். எங்களுக்கு தனியொரு நாடு அல்லது ஈழம் தேவையில்லை. ஆனால் எங்களுக்கு எது தேவை என்பதும் எமது உணர்வுகளும் தமிழர்களாகிய எமக்கு மட்டுமே தெரியும். வடக்கில் எமது மக்களின் பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவற்றை நிறைவு செய்யக்கூடிய பிரதிநிதிகள் எமக்குத் தேவை. உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள மக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் நிர்க்கதியடைந்துள்ளனர். எமது வீடுகள் என அழைப்பதற்கு எமக்கென ஒரு இடம் இல்லாத அதேவேளையில் எமது நிலங்களில் சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படுகின்றன. இது நீதியற்றது. தமது அவாக்களை நிறைவு செய்யக்கூடிய ஒரு அரசாங்கம் வேண்டும் என்பதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். போர் முடிவடைந்து விட்டது. ஆனால் நாங்கள் தற்போதும் அச்சத்துடனேயே வாழ்கிறோம். நாங்கள் சுதந்திரமாக எமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையைக் கொண்டிருக்கவில்லை. எமது அடிப்படை உரிமைகளை வழங்குமாறே நாம் கேட்கிறோம்”

“தெற்கிலும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என சிலர் கூறலாம். ஆனால் அவர்கள் தமக்கென நிலங்களை வாங்கியோ அல்லது வாடகை நிலங்களிலோ வாழ்கின்றனர். ஆனால் இங்கே இராணுவத்தினர் எமது நிலங்களை அபகரித்துள்ளனர். எமது நிலங்களில் அவர்கள் வாழ்கின்றனர். நாங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த எமது சொந்த நிலங்களிலிருந்து எங்களை அவர்கள் துரத்திவிட்டனர். நாவற்குழியில் சிங்களவர்களைப் பலவந்தமாகக் குடியேற்றியுள்ளனர்”

ஏ.இராஜேஸ்வரன்:

“தேக்கநிலை மற்றும் தொழில் வாய்ப்பின்மை போன்றன எமது வாழ்வை மேலும் கடினமாக்கியுள்ளன. நாங்கள் கடந்த காலத்தில் மிக மோசமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். கடந்த காலத்தில் எமக்கான தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான மிகவும் உயர்வான நம்பிக்கை எம்மிடம் இருந்தது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் எதனையும் எமக்குத் தரவில்லை. இதனால் நாங்கள் முன்பிருந்ததை விடத் தற்போது மிகவும் மோசமான நாட்டில் வாழ்கிறோம். நாட்டின் அரசியலில் நல்லதொரு மாற்றம் வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனர். அடுத்து நாட்டை ஆளவுள்ள அதிபர் தமிழ் மக்களுக்கு நலன் பயக்கும் தீர்வை முன்வைப்பாரா என்பது எமக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்”

‘வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கமானது நிறையச் செய்திருக்க முடியும். ஆனால் கெட்டவாய்ப்பாக, ஊழல் மற்றும் மோசடி போன்றன நாட்டில் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் சிறிலங்கா அரசாங்கம் தேர்தலில் வெற்றி கொள்ள முடியாது. போர் இடம்பெறும் போது இருந்த நாட்டை விட தற்போது சிறிலங்காவானது மிகவும் மோசாமான நாடாகக மாறிவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களது தோற்றத்திற்கான காரணம் என்பதை மறந்து அதிகாரம் மற்றும் பேராசை போன்றவற்றை முதன்மைப்படுத்தியதால் நாங்கள் அவர்கள் மீதும் அதிருப்தியடைந்திருந்தோம்”

“எனது குடும்பம் நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நான் ஒரு விவசாயி. நான் 2001-2002 காலப்பகுதியில் நன்றாக உழைத்தேன். ஆனால் தற்போது எனது வருவாய் குறைந்துவிட்டது. விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய போதிலும் இதுவரை நாங்கள் எதனையும் பெறவில்லை. அரசாங்கம் நெல்விவசாயிகளுக்கே  சிறிதளவு உதவிகளைச் செய்துள்ளது. ஆனால் எமக்கு எதனையும் தரவில்லை. இவ்வாறான சூழலால் நாம் நம்பிக்கை இழந்துள்ளோம். நாட்டின் ஆட்சி அதிகாரம் வேறொருவரிடம் மாறும் போது நாட்டில் செழுமையும் சமாதானமும் வரக்கூடிய நல்லதொரு சூழல் ஏற்படும் என நாம் நம்புகிறோம்”

நவரட்ணம் பரமலிங்கம்:

“தற்போதைய சூழல் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் விசனமடைந்துள்ளனர். அரசாங்கத்திலுள்ளவர்கள் தமது குடும்பம் மற்றும் நெருங்கியவர்களை வளப்படுத்துவதில் மட்டும் ஆர்வங் காண்பிக்கின்றனர். அவர்கள் எமக்காக எதனையும் செய்யவில்லை. அவர்கள் வீதிகள் மற்றும் தொடருந்துப் பாதைகளை அமைத்து, கட்டுமாண வசதிகளை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால் மக்களிடம் எவ்வித வருவாயும் இல்லாது, தமது குடும்பத்திற்கு உணவைக் கூட வழங்க முடியாத நிலையுள்ளபோது இவ்வாறான கட்டுமாண வசதிகள் இருந்தும் பயனில்லை. சொந்த வாகனங்களை வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு இவ்வாறான வீதிப் புனரமைப்பு பயனளிக்கும்”

“ஆனால் ஏழை மக்களைப் பொறுத்தளவில் அவர்களுக்கு அவர்களது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நாங்களும் இந்த நாட்டின் குடிமக்களலல்லவா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இது தொடர்பாக நாம் கேட்கும் போது, அரசாங்கம் தமக்கு அதிகாரத்தை வழங்கவில்லை எனவும், தமிழ் மக்களுக்கு நலன்பயக்கும் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒதுக்கீடுகளை வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான நிதி வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. அவர்கள் இதனை மக்களுக்கு உதவப் பயன்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொருவரும் தம்மிடம் தவறெதுவுமில்லை எனப் பந்து எறிவதால் மக்களாகிய எமக்கு மேலும் துன்பத்தைத் தருகிறதே தவிர வேறொன்றுமில்லை”

“எமது பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கும் கல்வி வழங்குவதற்கும் நாங்கள் பெரும் துன்பப்படும் அதேவேளையில், அதிகாரத்திலுள்ளவர்கள் அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடுகின்றனர். நாங்கள் ஒரு பெருமை மிக்க இனம். நாங்கள் எமது வாழ்வுக்காக யாரையும் கெஞ்சவில்லை. நாங்கள் கடந்த காலத்தில் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தோம். ஆனால் இன்று மிருகங்களை விட மிகவும் மோசமாக வாழ்கிறோம். நாங்கள் 24 ஆண்டுகளுக்கு மேல் இடம்பெயர்ந்து வாழ்கிறோம். நாங்கள் எந்தவொரு நட்டஈட்டையோ அல்லது மாற்று நிலங்களையோ பெறவில்லை. எமது வழக்குகள் இன்னமும் நீதிமன்றங்களில் நிலுவையிலேயே உள்ளன. எமக்கு எப்போது நீதிமன்றம் நீதியை வழங்கும் என்பது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்”

“எமது நிலங்கள் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. இராணுவத்தினர் மிகவும் மகிழ்வுடன் சுற்றுலா விடுதிகளை அமைத்துள்ளனர். எமது நிலங்களிலிருந்து இராணுவம் வருவாயைப் பெறுகின்றனர். ஆனால் நாங்கள்  நிலமற்றவர்களாக அலைந்து திரிகிறோம். யார் ஆட்சிக்கு வருவார்களோ என்பது எமக்குத் தெரியாது. நாங்கள் எல்லா அரசாங்கங்களின் மீதும் கட்சிகள் மீதும் நம்பிக்கையிழந்து வாழ்கிறோம். கடல் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட பல்வேறு வளங்கள் வடக்குப் பிரதேசத்தில் உள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தொழிலை மேம்படுத்துவதற்கான எவ்வித வளங்களையும் எமக்கு வழங்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக, நாங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ எதனையும் பெறவில்லை. நாங்கள் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து சில உதவிகளைப் பெற்றுள்ளோம்”

“அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை நிலைநாட்டியுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவர்கள் எமக்கு உதவி செய்யாது எம்மைப் பட்டினி போட்டு சாகும் நிலைக்குத் தள்ளுவதென்பது அரசாங்கத்தின் வெற்றிக்கு அர்த்தமற்றதாகும். எமக்கு இலவசமாக எதனையும் தருமாறு நாங்கள் கேட்கவில்லை. எமது நிலங்களையும் எமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளையும் எமக்குத் தருமாறு மட்டுமே நாங்கள் கேட்கிறோம்”

“எமக்கெனத் தனிநாடு எதுவும் தேவையில்லை. ஆனால் நாங்கள் இழந்தவற்றை மீளப்பெறுவதற்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எமக்கான தன்னாட்சி உரிமையை அரசாங்கம் தரவேண்டும். இதன்மூலம் புலம்பெயர் தமிழர்கள் இங்கு வந்து வடக்கில் எமக்கான தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கையால் புலம்பெயர் தமிழர்கள் வடக்கிற்கு வருகை தந்து முதலீடு செய்வதில் தயக்கம் காண்பிக்கின்றனர். பேராசை மிகுந்த அரசியல்வாதிகளுக்கு தமது பணத்தை விரயமாக்க புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை. அவர்கள் தமிழ் மக்களுக்கு உதவ விரும்புகிறார்கள். தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்காது அவர்களை அடக்கவே விரும்புகிறது”

ஆசா:

“நான் யாழ்ப்பாண மாநகர சபையில் பணிபுரிகிறேன். மாலை ஆறு மணிக்குப் பிறகு பெண்களாகிய நாங்கள் வீதிகளில் பயணிக்க முடியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் வழங்கப்படும் மிகவும் பயங்கரமான தண்டனைகள் காரணமாக குற்றங்கள் புரிவதற்கு மக்கள் அச்சப்பட்டனர். ஆனால் தற்போது காவற்துறையினர் குற்றங்கள் மற்றும் ஊழல்களைப் பார்த்துக் கொண்டு வாளாதுள்ளனர்”

“இளம் சமூகமானது முற்றிலும் சீரழிந்துவிட்டது. இவர்கள் தற்போது குழுக்களாக இணைந்து குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இது பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் தெருக்களில் பயணிக்கும் போது எங்களை சிறிலங்கா காவற்துறையினர் மறித்து எமது ஆவணங்களில் பிழையிருப்பதாகக் கூறி இலஞ்சம் பெற முற்படுகின்றனர். ஐம்பது ரூபாவைக் மூட அவர்கள் இலஞ்சமாகப் பெறுகிறார்கள். சிறிலங்கா காவற்துறையின் நிலை அவ்வளவு மோசமாகி விட்டது. இங்கு சட்டம் மற்றும் ஒழுங்கு காணப்படவில்லை. குற்றங்களைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையையும் சிறிலங்கா காவற்துறை முன்னெடுக்கவில்லை. எமது கலாசாரம் சீர்குலைவது அவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு யார் எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடலாம். அதற்காக காவற்துறையிடம் இலஞ்சம் கொடுத்துவிட்டு சுதந்திரமாகத் திரியலாம்.  நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. ஒவ்வொரு வாரமும் பல குற்றங்கள் பதியப்படுகின்ற போதிலும் காவற்துறையினர் அமைதி காக்கின்றனர். பிற்பகல் 5.30 மணியளவில் காவற்துறையினர் தமது பணிகளை நிறைவு செய்கின்றனர்”

“நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் நம்பிக்கை கொள்ளவில்லை. இன்றுவரை அவர்கள் இலஞ்சம் மற்றும் எமது கலாசார விழுமியங்கள் பாதிக்கப்படுதல், சட்டம் ஒழுங்கு சீர்குலைதல் போன்றவற்றை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மைத்திரிபால சிறிசிசேன தொடர்பாகவோ அல்லது வேறெந்த அதிபர் வேட்பாளர்கள் தொடர்பாகவோ நாம் எவ்வித கருத்துக்களையும் கொண்டிருக்கவில்லை. சில மாற்றங்களை இவர்கள் செய்வார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்”

“வீதிகள் அபிவிருத்தி செய்வது மட்டும் போதுமானதல்ல. இதற்கப்பால் ஒவ்வொரு துறையும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். வெற்று வாக்குகளை வழங்குவதற்குப் பதிலாக இதயசுத்தியுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே யாழ்ப்பாண மக்கள் தற்போது எதிர்பார்க்கின்றனர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *