மேலும்

சிறிலங்கா அரசு, இராணுவம் மீதான போர்க்குற்ற ஆதாரங்கள் ஐ.நா விசாரணைக்குழுவிடம் ஒப்படைப்பு

OHCHR-expert-panalசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சாட்சியங்களுடன் கூடிய விரிவான அறிக்கை ஒன்று, அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையத்தினால், ஐ.நா விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, மார்ட்டி அதிசாரி தலைமையிலான நிபுணர் குழவின் வழிகாட்டலின் கீழ் விசாரணை நடத்தும், சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவிடமே, இந்த விரிவான ஆய்வு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்களில், சிறிலங்கா அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் உள்ள பொறுப்புக் குறித்து இந்த ஆய்வு அறிக்கையில் விரிவாக சாட்சியங்களுடன் விபரிக்கப்பட்டுள்ளதாக, அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையத்தினால், சாட்சிகளின் ஒரு தொகுதி முக்கியமான சாட்சியங்களும் ஐ.நா விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

2009ம் ஆண்டு சிறிலங்காவில் போர் இறுதிக்கட்டத்தை எட்டியதில் இருந்து, இந்த அமைப்பு, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், தொடர்பான குற்றவியல் ஆய்வுகளை மேற்கொண்டு ஆவணங்களைத் திரட்டி வந்துள்ளது.

அத்துடன் தறபோதும் வடக்கு,கிழக்கில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் ரீதியான வன்முறைகள் குறித்தும் இந்த அமைப்பினால் தகவல்கள் திரட்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தீவிரமான ஆய்வின் முடிவில், சிறிலங்கா ஆயுதப்படைகளைச் சேர்ந்த சந்தேகநபர்களான சில தனிநபர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

“வெளிநாடுகளில் இராஜதந்திர சலுகைகளை அனுபவித்து வந்த இரண்டு முன்னாள் இராணுவ சந்தேக நபர்களுக்கு போர்க்குற்றங்களில் உள்ள தொடர்பை நாம் வெளிக் கொண்டு வந்ததன் மூலம், அவர்கள் அந்தப் பணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.

லண்டனிலும் பேர்லினிலும், சிறிலங்கா தூதரகங்களில் பணியாற்றிய அவர்கள் விரைவாக நாடு திரும்பும் நிலை ஏற்பட்டது” என்றும் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *