மேலும்

மைத்திரிபால சிறிசேனவிடம் ‘நாடி’ பிடித்துப் பார்க்கவுள்ள அஜித் டோவல்

ajith-kumar-dhovalஎதிரணியின் பொதுவேட்பாளராக, போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மேற்கொள்ளவுள்ள சந்திப்பின் மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை மைத்திரிபால சிறிசேனவையும், சந்திரிகா குமாரதுங்கவையும், அஜித் டோவல் சந்திக்கவுள்ளார்.

நாளை மாலை ஐதேக தலைவர்களுடன் தனியான சந்திப்பு ஒன்றையும் அவர் மேற்கொள்ளவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசையும் அவர் சந்திக்கவுள்ளார்.

அவர் மாலைதீவுக்குப் புறப்படுவதற்கு முன்னர், செவ்வாய்க்கிழமை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும் சந்தித்துப் பேசுவார்.

சிறிலங்கா அதிபருக்கு சவாலாக அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கும் அஜித் டோவலுக்கும் இடையில் நடக்கவுள்ள சந்திப்பே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சந்திரிகா குமாரதுங்க இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால் மைத்திரிபால சிறிசேன அவ்வளவாக அறியப்படாதவர்.

இந்தியாவின் தலைமை புலனாய்வு அதிகாரியும், பாதுகாப்பு நிபுணருமான அஜித் டோவல், மைத்திரிபால சிறிசேனவின் ஆளுமையை தெரிந்து கொள்ளும் முயற்சியில் நிச்சயமாக ஈடுபடுவார்.

ராஜபக்சவின் அரசாங்கம் பொருளாதார மற்றும் மூலோபாய ரீதியாக பீஜிங்கை நோக்கிச் சார்ந்துள்ள நிலையில், இந்திய – சிறிலங்கா உறவுகள் தொடர்பாக மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா குமாரதுங்கவின் நிலைப்பாடுகளையும் அஜித் டோவல் அறிந்து கொள்ளவுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொழும்பு எவ்வாறு வேறுபட்ட வகையில் செயற்படும் என்பதையும் அவர் அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்.

மேலும், தமிழ்பேசும் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரப்பகிர்வை வழங்கும் வகையில், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மைத்திரிபால சிறிசேன எந்தளவுக்கு முயற்சிகளை மேற்கொள்வார் என்பதை அறிந்து கொள்வதிலும் அஜித் டோவல் ஆர்வம் காட்டுவார் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *