மேலும்

மகிந்த குடும்பத்தை போர்க்குற்ற விசாரணையில் இருந்து பாதுகாப்பேன்– மைத்திரிபால உறுதிமொழி

cbk-maithripalaசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையோ, அவரது குடும்பத்தினரையோ அல்லது போரை வென்றெடுத்த படையினரையோ, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல தான் அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஐதேக தலைமையகத்தில், இன்று காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

‘அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால், அவரை அனைத்துலக  நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போவதாக வெளிநாட்டில் உள்ள, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

நான் அதிபரான பின்னரும், அனைத்துலக அளவில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த சவாலுக்கு எதிராகவும், குரல் கொடுப்பேன்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர்,  மகிந்த ராஜபக்ச, அவரது குடும்பத்தினர், பாதுகாப்புச் செயலர், அல்லது நாட்டை மீட்ட முப்படையினர் உட்பட அனைவரையும், விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கின்றேன்.

எனது கையில் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால், நிச்சயமாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவேன்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், கரு ஜெயசூரிய, ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *