மேலும்

வெளிநாடுகளில் 18 கடற்படைத் தளங்களை அமைக்கும் திட்டம் – சீனா நழுவலான பதில்

Colonel Geng Yanshengசிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக வெளியான அறிக்கை குறித்து விசாரணை நடத்தியுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மூத்த கேணல் ஜெங் யன்செங்கிடம், செய்தியாளர்கள் இதுகுறித்தும், சிறிலங்காவுக்கு இரண்டாவது தடவையும் சீன கடற்படை நீருமூழ்கி சென்றிருந்தது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

1.நமீபியாவில் உள்ள வல்விஸ் குடா உள்ளிட்ட 18 இடங்களில் சீனா இராணுவத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கருத்து வெளியிட முடியுமா?

2.செப்ரெம்பர் மாத முற்பகுதியில், முதலாவது சீன நீர் மூழ்கி சிறிலங்காவில் தரித்து நின்றதாகவும், மீண்டும் குறுகிய காலத்துக்குள் இரண்டாவது நீர்மூழ்கி அங்கு தரித்து நின்றதாகவும், அண்மையில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை உறுதிப்படுத்த முடியுமா?

என்று செய்தியாளர் ஒருவர் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த, சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மூத்த கேணல் ஜெங் யன்செங்,

“முதலில் இரண்டாவது கேள்விக்குப் பதிலளிப்பதில் இருந்து தொடங்குகிறேன். நீங்கள் சுட்டிக்காட்டிய அறிக்கை மிகச் சரியானது அல்ல.

அண்மையில், சோமாலியாவுக்கு அப்பாலுள்ள ஏடன் வளைகுடாவில், உள்ள சீனக்கடற்படையின் அணியுடன், சீனக் கடற்படையின் நீர்மூழ்கி ஒன்று இணைந்திருந்தது.

அந்த நீர்மூழ்கி அங்கு செல்லும் போதும், அங்கிருந்து திரும்பும் போதும், சிறிலங்காவில் இரண்டு முறை தரித்தது. இது வழக்கமானதொன்று தான்.

உலகில் கடற்படை நீர்மூழ்கிகள் பயணத்தை மேற்கொள்ளும் போது, குறிப்பிட்ட துறைமுகங்களில் விநியோகத் தேவைக்காக தரிப்பது வழக்கமே.

இனி, முதல் கேள்வியைப் பொறுத்தவரையில், நாம் சில விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

அதன்படி, அந்த அறிக்கை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இணையத்தளத்தில் அதிகாரபூர்வமற்ற வகையில், வெளியிடப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், உள்ளடக்கத்தையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, அந்த அறிக்கை முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது.” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, வெளிநாட்டு இராணுவத் தளங்கள் தொடர்பான சீனாவின் கொள்கையை விளக்க முடியுமா? என்றும், எந்த அடிப்படையில், சீனா கப்பல்களையோ, படையினரையோ வெளிநாடு ஒன்றில் நிறுத்தக் கூடும்? என்றும் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர், இந்தக் கேள்விக்கு தற்போது சீன இராணுவத்துக்கு வெளிநாடுகளில் இராணுவத் தளங்கள் ஏதுவும் கிடையாது என்று மட்டுமே என்னால் பதில் கூற முடியும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக சீனா வெளிநாடுகளில் இராணுவத் தளங்களை உருவாக்கப் போவதில்லை என்று கூறியிருந்தது.

எனினும், சீனப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர், தற்போது அவ்வாறு கூறவில்லை.

தற்போது சீனாவுக்கு வெளிநாட்டில் தளங்கள் இல்லை என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

நமீபிய நாளிதழில் வெளியான அறிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ள போதிலும், அந்த அறிக்கையின் மூலப்பிரதி குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *