மேலும்

அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை மாற்றம் – கட்சி தாவல்களைத் தடுக்க அவசர நடவடிக்கை

????????????????????????அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதால், அடுத்தவாரம் அமைச்சரவையை மாற்றியமைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிரணியின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் அவருக்கு ஆதரவாக நேற்றைய ஊடக மாநாட்டில் பங்கேற்ற 3 அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று மாலை பதவிநீக்கம் செய்திருந்தார்.

அத்துடன், அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இந்தநிலையில், இந்த வாரம் நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், பதவிகளைப் பறிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்தநிலையில் அடுத்த வாரத்துக்குள் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரத்துக்குள் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

எதிரணியுடன் இணைந்து கொண்டவர்கள் வகித்து வந்த பதவிகளுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த பிரமுகர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில், அவரது இடத்துக்கு, எஸ்.பி.திசநாயக்கவை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஐதேகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசதரப்புக்கு இழுத்து, அவர்களை அமைச்சர்களாக நியமிக்கவும் அரசதரப்பு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார அரசதரப்புக்குத் தாவியிருந்தார்.

அவருக்கு 25 கோடி ரூபா பணமும், அமைச்சர் பதவியும் பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, மேலும் பலரை அரசதரப்புக்கு இழுக்கும் முயற்சிகளில், பசில் ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்த ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவுக்கு, கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று நடந்த கட்சியின் உயிரமட்டக் கூட்டத்தில், இந்த முடிவை எதிர்த்ததுடன், ஐதேகவில் இருந்து ரணில் அல்லது சஜித் பிறேமதாச போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கக் கூடியவர் மைத்திரிபால சிறிசேன என்பதை பெரும்பாலான ஐதேக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *