“ஐயோ சிறிசேன” – புலம்புகிறார் மகிந்த
மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொறியில் விழுந்து விட்டதாகவும், 2010ம் ஆண்டு சரத் பொன்சேகா விழுந்த பொறியில் இப்போது அவர் விழுந்துள்ளார் என்றும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“எமது பொதுச்செயலர் கட்சியை விட்டு விலகி, அதிபர் தேர்தலில் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடப் போகிறார்.
நான் அவருக்காக வருந்துகிறேன்.
இப்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டு மைத்திரிகள் உள்ளனர்.
ஒருவர் வீட்டுக்குள் (மனைவி மைத்ரி) இருக்கிறார். மற்றவர் (மைத்திரிபால சிறிசேன) வெளியில் இருக்கிறார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
ஆனால், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு தெரிவுக்குழுவை அமைத்து இரண்டு ஆண்டுகளாகியும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, எதிரணியின் பொதுவேட்பாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்பட்டுள்ளது குறித்த செய்தியை சிறிலங்காவின் அரசசார்பு ஊடகங்கள் இருட்டிப்புச் செய்துள்ளன.
இன்று வெளியான லேக் ஹவுஸ் ஊடகங்களில் இதுபற்றிய செய்திகள் ஏதும் வெளியிடப்படக் கூடாது என்று உயர்மட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தினகரன் நாளிதழில் பொதுவேட்பாளர் குறித்த எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.
மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 4 அமைச்சர்கள் பதவிநீக்கப்பட்டது பற்றிய செய்தியையும் கூட அந்த நாளிதழ் வெளியிடவில்லை.
அதேவேளை, டெய்லி நியூஸ் நாளிதழ், “ஐயோ சிறிசேன” என்ற பிரதான தலைப்பில் சிறிலங்கா அதிபர் ஆற்றிய உரை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், அவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆனால், நான்கு அமைச்சர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தி மட்டும் வெளியாகியுள்ளது.