மேலும்

இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் – சிறிலங்காவுக்கு பாஜக எச்சரிக்கை

m.j.akbarநீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வர்த்தக நோக்கத்துக்காக கொழும்பு வராது, எனவே இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே.அக்பர்.

சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள, எம்.ஜே.அக்பர், கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், நேற்று முன்தினம் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவுரையை நிகழ்த்தினார்.

அந்த உரையிலே அவர்  மேலும் தெரிவித்ததாவது,

“எமது பிராந்தியத்தில் சமாதானமும் நட்பும் அவசியமாகும்.அயல் நாடுகளுடனான உறவு மிக முக்கியமானதாகும்.

இந்திய பிரதமர் ஜப்பானுக்கும் சென்றார். சீனாவுக்கும் சென்றார். பிராந்திய நலன் முக்கியமாகும்.

இதேவேளை பயங்கரவாதத்தை தவிர ஏனைய அனைத்து முரண்பாடுகளையும் பேசித்தீர்க்க முடியும்.

ஆனால் பயங்கரவாதத்துக்கு இடமளிக்க முடியாது.

எமது பிராந்திய நாடுகள் எவ்வாறு நவீன நாடுகளாக உருவெடுப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

சங்காயில் உற்பத்தி செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருவது தளபாடங்களை ஏற்றிக்கொண்டு அல்ல. சந்தை நோக்கத்துடன் நீர்மூழ்கிக் கப்பல் வராது.

இந்தியாவின் நலனே பிராந்தியத்தின் நலம். இதனை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம்.

m.j.akbar-colombo-speech

முரண்பாடுகள் இருக்கலாம். புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் கூட முரண்பாடுகள் இருக்கலாம்.

போரின்போது இந்தியா சிறிலங்காவுக்கு மிகப்பெரிய உதவியை வழங்கியது.

அந்த சூழ்நிலையின் தாற்பரியத்தை உணர்ந்து இந்தியா சிறிலங்காவுக்கு உதவி செய்தது.

1970களில் நாம் வாழவில்லை. பாதுகாப்புடன் விளையாடவேண்டாம்

இந்தியா இந்தப் பிராந்தியத்தில் பெரிய நாடாக இருப்பது இயற்கையாக அமைந்த விடயம்.

இந்நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறந்த உறவு முக்கியம்.

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வருகை தராமை தவறாகும்.

ஆனால் தற்போதைய இந்தியப் பிரதமர் தனது பதவியேற்புக்கு சிறிலங்கா அதிபரை அழைத்தார்.

இந்த விடயத்தில் மாநிலத்தின் உணர்வு குறித்து மத்திய அரசாங்கம் கவலை கொள்ளவில்லை.

மாற்றத்தை புரிந்து கொள்ளுங்கள்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *