மேலும்

பொதுவேட்பாளர் தெரிவில் திணறும் எதிர்க்கட்சிகள்

CBK-Ranil-Karuசிறிலங்கா அரசாங்கம் வரும் ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

மங்கள சமரவீரவின் நெருக்குதலால், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்ததையடுத்து, மாற்று வேட்பாளர் தெரிவில் குழப்பம் நீடிக்கிறது.

முன்னதாக, நேற்று ஐதேக தலைவர்களில் ஒருவரான கரு ஜெயசூரியவை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று கரு ஜெயசூரியவைத் தொடர்பு கொண்டு, பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வாழ்த்தும் கூறியிருந்தார்.

இதற்கிடையே, சந்திரிகா குமாரதுங்கவையா அல்லது கரு ஜெயசூரியவையா பொதுவேட்பாளராக நிறுத்துவது என்பதில் முடிவெடுக்க முடியாத குழப்பநிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவும், அவருக்கு நெருக்கமானவர்களும், ஏனைய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கருத்தை அறிவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

எனினும் உடனடியாக சந்திரிகா குமாரதுங்கவின் பெயரே தற்போது முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பில், ஐதேகவின் முன்னாள் தலைவர் மலிக் சமரவிக்கிரம பேச்சு நடத்தியுள்ளதாகவும், அதற்கு சந்திரிகா மூன்று நாள் காலஅவகாசம் கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்திரிகாவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதேவேளை, வோட்டர் எட்ஜ் ஊழல் வழக்கில் சந்திரிகா குமாரதுங்கவுக்கு உயர்நீதிமன்றம், 3 மில்லியன் ரூபா அபராதம் விதித்திருந்தது, அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையை ஏற்படுத்தும் என்று ஐதேக சட்டவாளர்கள் சிலரும் எச்சரித்துள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கம் தேர்தல் நாளை முன்தள்ளிவைத்து. அதற்குரிய ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இன்னம் பொதுவேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *