மேலும்

கதிகலங்கிப் போனது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையப் பணியாளர்கள் இன்று காலை நடத்திய திடீர் பணிநிறுத்தப் போராட்டத்தினால், சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இன்று காலை 9 மணியளவில் சுமார் 2000 விமான நிலையப் பணியாளர்கள், இந்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

10 ஆயிரம் ரூபா சம்பள உயர் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய பணியாளர்கள், காலை சுமார் 10 மணியளவில் விமான நிலையத்தின் மின்சார இணைப்பையும் துண்டித்தனர்.

இதையடுத்து, மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரம் வழங்கப்பட்ட போதும், அதனையும் பணியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் விமான நிலையம் இருளில் மூழ்கியது.

இதனால், விமான நிலையத்துக்குள் இருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.

அதேவேளை, விமான நிலையத் தொலைபேசிக் கட்டமைப்பும் செயலிழந்து போனதால், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மற்றும் சுங்க அதிகாரிகளாலும் எந்தப் பணியையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

பயணிகள விமானத்தில் இருந்து கீழ் இறக்குவதற்கான நகரும் பாலத்தை பணியாளர்கள் இயக்க மறுத்ததால், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நான்கு விமானங்களில் இருந்த பயணிகள் கீழ் இறங்க முடியாமல் தவித்தனர்.

விமான நிலையத்துக்குள் சுமார் 2000 பயணிகள் சிக்கித் திணறினர்.

அதேவேளை, கட்டுநாயக்க நோக்கி வந்த சில விமானங்கள், மத்தால விமான நிலையத்துக்கும், சென்னைக்கும் திருப்பி விடப்பட்டன.

சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கார ஜெயரத்ன, பணியாளர்களுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, பணிநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, காலை 11 மணியளவில் விமான நிலையப் பணிகள் மீளவும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *