ஐ.நா மனித உரிமைகள் குழுவுக்கு எந்த உரிமையும் இல்லை – சிறிலங்கா கூறுகிறது
சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் குழு அண்மையில் விடுத்திருந்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைக் குழு சிறிலங்கா தொடர்பாக ஐந்தாவது மீளாய்வை மேற்கொண்டதை அடுத்து வெளியிட்ட அறிக்கையில், 18வது அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
கடந்த 2010ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 18வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்கா அதிபரின் அதிகாரங்களை வரையறையற்றதாக்கியதுடன், நீதித்துறை உள்ளிட்ட சுதந்திரமான ஆணைக்குழுக்களின் அதிகாரங்களையும் பறித்திருந்தது.
இது குறித்துக் கவலை வெளியிட்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் குழு, 18வது திருத்தச்சட்டத்தை நீக்கி மீண்டும் சுதந்திரமான ஆணைக்குழுக்கள் செயற்பட இடமளிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தது.
ஆனால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தச்சட்டத்தை நீக்குமாறு கோரும் எந்த உரிமையும் ஐ.நா மனித உரிமைகள் குழுவுக்குக் கிடையாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.