மேலும்

தமிழரசுக் கட்சி சார்பில் 23 பேர் போட்டி- அதிகாரபூர்வமாக அறிவித்தார் சம்பந்தன்

TNA_PRESSவரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களிலும் உள்ள, 29 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக 44 வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தவுள்ளது.

வவுனியாவில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில், எந்தெந்த மாவட்டங்களில், எந்தக் கட்சி,  எத்தனை வேட்பாளர்களை நிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 23 வேட்பாளர்களையும், ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எவ் ஆகியன தலா 8 வேட்பாளர்களையும், புளொட்  5 வேட்பாளர்களையும் நிறுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அமைய, கட்சித் தலைவர்களை வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து கூடி ஆராய்ந்து முடிவெடுப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 7 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில், தமிழரசுக் கட்சி 6 வேட்பாளர்களையும், ஈபிஆர்எல்எவ் 2 வேட்பாளர்களையும், புளொட் மற்றும் ரெலோ ஆகியன தலா 1 வேட்பாளரையும் நிறுத்தவுள்ளன.

6 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட வன்னி தேர்தல் மாவட்டத்தில், போட்டியிடுவதற்காக, சமர்ப்பிக்கப்படும் 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில், தமிழரசுக் கட்சி 3 வேட்பாளர்களையும், ரெலோ 3 வேட்பாளர்களையும், ஈபிஆர்எல்எவ் 2 வேட்பாளர்களையும், புளொட் 1 வேட்பாளரையும் நிறுத்தும்.

5 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில், சமர்ப்பிக்கப்பட வேண்டிய 8 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில், தமிழரசுக் கட்சி 5 வேட்பாளர்களும், ஈபிஆர்எல்எவ் , புளொட் மற்றும் ரெலோ ஆகியன தலா 1 வேட்பாளர்களும் நிறுத்தப்படவுள்ளனர்.

7 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில், சமர்ப்பிக்கப்படும் 10 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலில், தமிழரசுக் கட்சி 5 வேட்பாளர்களையும், ஈபிஆர்எல்எவ் மற்றும் ரெலோ ஆகியன தலா 2 வேட்பாளர்களையும், புளொட் 1 வேட்பாளரையும் நிறுத்தவுள்ளன.

4 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட திருகோணமலை மாவட்டத்தில், சமர்ப்பிக்கப்படும், 7 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில், தமிழரசுக் கட்சி சார்பில் 4 வேட்பாளர்களும், ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் சார்பில் தலா 1 வேட்பாளர்களும் இடம்பெறவுள்ளனர்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பட்டியல்களை அந்தந்த மாவட்டச் செயலகங்களில், வரும் வெள்ளிக்கிழமை சமர்ப்பிப்பது என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *