மேலும்

இன்று மாவீரர் நாள் – நினைவேந்தலுக்கு தயாராகியுள்ள தமிழர் தாயகம்

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்று, தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழீழ மாவீரர் நாளை முன்னிட்டு தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

நகரங்கள், கிராமங்களிலும் மாவீரர் நினைவுப் பந்தல்கள் அமைக்கப்பட்டு மாவீரர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பிரதேச ரீதியாக மாவீரர்களின் படங்கள், பெயர்கள் அடங்கிய கல்வெட்டுகள் வைக்கப்பட்ட நினைவாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளாால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக தயார் படுத்தப்பட்டுள்ளன.

துயிலுமில்லங்களிலும் மாவீரர் நினைவாலயங்களிலும் இன்று மாலை 6.07 மணிக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் கடுமையான அச்சுறுத்தல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்த நினைவேந்தல் ஏற்பாடுகளில் பொதுமக்கள், முன்னாள் போராளிகள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *