இஸ்ரேல், மொசாட்டுக்கு இடமளிப்பது சிறிலங்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்
இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கும் மொசாட் முகவர்களுக்கும் சிறிலங்காவில் இடமளிப்பது, நாட்டின் பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஆகியவற்றிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதத்தில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான்,
சிறிலங்காவின் கட்டணமில்லா நுழைவிசைவு திட்டத்தில் இஸ்ரேல் ஏன் சேர்க்கப்பட்டது?
பாலஸ்தீனத்தில் சுமார் 20,000 குழந்தைகள் மற்றும் சுமார் 75,000 மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்படும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்கள், ஓய்வெடுப்பதற்காக சிறிலங்கா வர இது வழிவகுக்கக் கூடும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
ஐரோப்பா, கனடா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள் இஸ்ரேலுடனான உறவைக் குறைத்து வருகின்றன.
பிரதமர் முன்னதாக சட்டவிரோதமானவை என்று அறிவித்த கொழும்பு 7-இல் உள்ள ‘சபாத் ஹவுஸ்’ ஏன் இன்னும் மூடப்படவில்லை?
அங்கு தற்போது சிறப்பு அதிரடிப்படையினருக்கு பதிலாக, சாதாரண காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முந்தைய எந்தவொரு அரசாங்கத்தை விடவும், தற்போதைய அரசாங்கம் இஸ்ரேல் சிறிலங்காவில் செயல்படுவதற்கு அதிக இடவசதியை வழங்கியுள்ளது.
இத்தகைய போக்குகள் நாட்டின் பாதுகாப்பிற்கும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமையக் கூடும் என்றும், எச்சரித்தார்.
